கள்ளக்காதலியின் ஆசைகளை நிறைவேற்ற கொள்ளையனாக மாறிய பிரபல டாட்டூ கலைஞர்: கூட்டாளிகள் 2 பேரும் பிடிபட்டனர்; 15 சவரன், செல்ேபான்கள் பறிமுதல்

சென்னை: கள்ளக்காதலியின் ஆசைகளை நிறைவேற்ற கொள்ளையனாக மாறிய டாட்டூ கலைஞரை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் 2 பேர் மற்றும் கள்ளக்காதலியும் கைது செய்யப்பட்டனர். வில்லிவாக்கம் மற்றும் ராஜமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த மாதம் தொடர்ச்சியாக செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், அண்ணாநகர் துணை ஆணையர் ஜவகர் தலைமையில் தனிப்படை போலீசார், சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரித்தனர். மேலும், திருடுபோன செல்போனின் ஐஎம்இஐ எண்ணை வைத்து, திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (25), மனோஜ் (25) ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், மீஞ்சூர் பகுதியை சேர்ந்த டாட்டூ கலைஞர் வசந்த் (35) என்பவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கைதான வசந்த், வடபழனியில் டாட்டூ (பச்சை குத்தும்) கடை நடத்தி வந்துள்ளார். இதில் சிறந்து விளங்கியதால், பிரபலமாகியுள்ளார். அதன்பேரில் இவரிடம் சின்னத்திரை மற்றும் சினிமா நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் டாட்டூ குத்தியுள்ளார். இதனால், அதிக வருவாய் கிடைத்துள்ளது. இவர், ஜிம்னாஸ்டிக், யோகா கலையிலும் சாதனை படைத்துள்ளார். மேலும், டாட்டூ குத்துவது தொடர்பாக யுடியூப்பில் வீடியோக்கள் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், இவரது கடைக்கு வந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவருன் வெளியில் சுற்றித்திரிந்து, அவர் கேட்கும் பொருட்களை வாங்கி கொடுத்து வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த வருடத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, டாட்டூ குத்துவதை நிறுத்தியுள்ளார். இதனால் பணக்கஷ்டம் ஏற்பட்டு, கடந்த 6 மாதமாக கள்ளக்காதலிக்கு செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தனது கூட்டாளிகளான சங்கர், மனோஜ் ஆகியோருடன் சேர்ந்து செல்போன் மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டு கொள்ளையனாக மாறியுள்ளார். கைது செய்யப்பட்ட பவர் வசந்த் மீது வண்ணாரப்பேட்டை, ராஜமங்கலம், வில்லிவாக்கம், கொளத்தூர் மற்றும் மீஞ்சூர் ஆகிய காவல் நிலையங்களில் செயின் மற்றும் செல்போன் பறிப்பு என 14 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, வசந்த், அவரது கூட்டாளிகள் சங்கர், மனோஜ் மற்றும் கள்ளக்காதலி மங்களதேவி (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 சவரன் நகை, 5 செல்போன்கள், 2 இருசக்கர வாகனம் மற்றும் பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: