×

இரும்பு ராடால் அடித்து வீட்டு உரிமையாளர் படுகொலை: கொடுங்கையூரில் பயங்கரம்

பெரம்பூர்: கொடுங்கையூரில் தனியாக வசித்து வந்த வீட்டு உரிமையாளர் இரும்பு ராடால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொடுங்கையூர் காமராஜர் சாலையை சேர்ந்தவர் ராஜ்குமார் (42). இவருக்கு திருமணமாகி எலிசபெத் ராணி என்ற மனைவியும், அஜீத் (7) என்ற மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 வருடமாக தம்பதி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கொடுங்கையூர் மேட்டு தெருவை சேர்ந்த ரேவதி என்பவருடன் ராஜ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டு, கடந்த 3 வருடமாக அவருடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் தனது வீடு மற்றும் கடையிலிருந்து வரும் வாடகை பணத்தில் வாழ்ந்து வந்துள்ளார். மேலும், குடிபோதைக்கு அடிமையானதால், இரவு நேரங்களில் நண்பர்களை வரவழைத்து தனது வீட்டில் மது அருந்துவது வழக்கம். இதை அவரது தாய் சுமதி பலமுறை கண்டித்தும், கேட்கவில்லை. இதனால், அருகிலுள்ள கொடுங்கையூர் நியூ காலனி ஜம்புலிங்கம் தெருவில் உள்ள தனது மகள் ஜெனிபர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி வந்துள்ளார். ராஜ்குமார் மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் 2 மணி வரை ராஜ்குமார் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த ராஜ்குமாரின் தங்கை ஜெனிபர்,  உள்ளே சென்று பார்த்தபோது தலையில் பலத்த காயங்களுடன் ராஜ்குமார் இறந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெனிபர் வெளியே ஓடி வந்து அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார்.

இதுகுறித்து, கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருகில் ரத்த கரையுடன் படிந்து இருந்த இரும்பு ராடை தயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் அதிகமாக ரத்தம் வழிந்தோடியதால் மோப்ப நாய் பரத் வரவழைக்கப்பட்டு ரத்த வாடையை வைத்து குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் கொடுங்கையூர் போலீசார் ஈடுபட்டனர். மேலும், நேற்று முன்தினம் இரவு ராஜ்குமார் யாருடன் மது அருந்தினார் மற்றும் முன்விரோதம் ஏதாவது உள்ளதா என்ற பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த பகுதியில் இரும்பு ராடால் அடித்து வீட்டு உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kodungaiyur ,
× RELATED கொடுங்கையூர், பெருங்குடி குப்பை...