தூத்துக்குடி கலெக்டர்அலுவலகத்தில் பரபரப்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி, ஏப்.20: லாரிக்கான தவணைத்தொகை செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டுவரும் தற்காலிக ரேஷன் கடை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றுத்திறனாளி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி அருகேயுள்ள கீழத்தட்டப்பாறையை சேர்ந்தவர் ஆனந்தன். மாற்றுத்திறனாளியான இவர், கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைக்கண்ட பாதுகாப்புக்கு நின்ற சிப்காட் போலீசார், அவரது உடலில் தண்ணீரை ஊற்றி தடுத்து மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.

ஆனந்தன், கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு ராமலட்சுமி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். மாற்றுத்திறனாளியான நான் மளிகைகடை நடத்தி வருகிறேன். நான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லாரி ஒன்றை மாதத்தவணை அடிப்படையில் வாங்கினேன். ஆனால், லாரித்தொழில் சரிவர இல்லாததால் அந்த லாரியை மாப்பிள்ளையூரணியை சேர்ந்த தற்காலிக ரேஷன் கடை பணியாளர் சுப்பிரமணியத்திடம் விற்பனை செய்தேன்.

ரூ.45 ஆயிரத்தை மட்டும் முன் பணமாக கொடுத்த சுப்பிரமணியன், மாதம்தோறும் லாரிக்கான தவணை தொகையை தானே செலுத்தி விடுவதாகவும், 2மாதத்தில் ஆர்.சி. புக்கை தனது பெயருக்கு மாற்றி விடுவதாகவும் என்னிடம் உறுதியளித்தார். ஆனால், மாதங்கள் பல கடந்தும் அவர் லாரிக்கு மாதத்தவணை தொகையை செலுத்தவில்லை. இதனால், லாரி வாங்குவதற்கு கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனத்தினர் என்னிடம் கடன் தொகையை செலுத்துமாறு கூறியதுடன், வீட்டை ஜப்தி செய்துவிடுவதாகவும் நோட்டீஸ் அனுப்பி விட்டனர்.

இதுகுறித்து, நான் சுப்பிரமணியத்திடம் கேட்டதற்கு அவர் உரிய பதில் சொல்லவில்லை. இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது, வாங்கிய லாரிக்கான தவணை தொகையை செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு வரும் சுப்பிரமணியன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதனிடையே குற்றம் சாட்டப்பட்டுள்ள தற்காலிக ரேஷன் கடை பணியாளர் சுப்பிரமணியன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: