நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை மீண்டும் திறப்பு

நெல்லை, ஏப். 20: கொரேனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் 22ம் தேதி, முதல் கொரோனா பாதித்தவர் கண்டுபிடிக்கப்பட்டார். துபாயில் இருந்து வந்த அவருக்கு தொற்று பரவியது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து மறுநாள் நெல்லை கலெக்டர்  அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக 24 மணி நேர  கட்டுப்பாட்டு அறை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் திறக்கப்பட்டது. அப்போது பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வந்தது. நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரிப்பை தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி முகமையின் சாரல் அரங்கிற்கு கட்டுப்பாட்டு அறை மாற்றப்பட்டது. அதன் பின்னர் நோய்த் தொற்று குறைந்தது. ஓரிரு நோயாளிகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டதால் கட்டுப்பாட்டு அறை செயல்படவில்லை. இங்கு பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் அவரவர் துறை சார்ந்த பணிக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது கொரோனா 2வது அலை காரணமாக நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை நெல்லை கலெக்டர் அலுவலக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சாரல் அரங்கில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை பணியில் டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் பட்டியல் மூலம் அவர்கள் மருத்துவமனையில் இருக்கின்றனரா? தனிமையில் உள்ளனரா என கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பு கொண்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனிமையில் இருப்பவர்களின் நோய்த் தீவிரம் எவ்வாறு உள்ளது, மருந்து, மாத்திரைகள் தேவையா என விசாரிக்கப்படுகிறது.

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனரா, தனிமையில் உள்ளனரா என அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து அவர்களது உடல்நிலை, தனிமைப்படுத்தும் காலம் குறித்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் விஷ்ணு கூறுகையில், கொரோனா  பாதிக்கப்பட்ட நோயாளிகளின்  ஆலோசனைக்காக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்  கட்டுப்பாட்டு அறை  திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்பு கொண்டு கொரோனா  பாதித்த நோயாளிகளை  108 ஆம்புலன்ஸ் மூலமே அனுப்பி வைக்கிறோம், என்றார்.

Related Stories: