கோனேரிப்பட்டி கதவணை நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றம் பாறை திட்டுகளாக மாறிய காவிரியாறு

இடைப்பாடி, ஏப்.20:  இடைப்பாடி அருகே கோனேரிப்பட்டி நீர் மின் தேக்க கதவணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காவிரி ஆறு பாறை திட்டுகளாக காட்சி அளித்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், செக்கானூர் நீர்மின்தேக்க நிலையம், நெருஞ்சிப்பேட்டை நீர்மின்தேக்க நிலையம், கோனேரிப்பட்டி நீர் மின்தேக்க நிலையம், ஊராட்சிக்கோட்டை நீர் மின்தேக்க நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேக்கி வைக்கப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வருடந்தோறும் ஏப்ரல், மே மாதத்தில் நீர்மின் தேக்க கதவணைகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு, 15 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கோனேரிப்பட்டி நீர்மின் தேக்க கதவணை பகுதியில், அனைத்து மதகுகளும் திறந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேலும் நீர்த்தேக்க பகுதிகளான கோனேரிப்பட்டி, கோட்டமேடு, சிலுவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி பாறை திட்டுகளாக காட்சி அளிக்கிறது. குறைவான தண்ணீர் உள்ள பாறை இடுக்குகளில் உள்ள மீன்களை சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் பிடித்து வருகின்றனர். கடல் போல் காட்சி அளித்த காவிரி, தற்போது பாறை திட்டுகளாக மாறி உள்ளது.

Related Stories:

>