ஆத்தூர் அருகே பரபரப்பு போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 42 பவுன் நகை திருட்டு வெள்ளையடிக்க வந்தவரிடம் விசாரணை

ஆத்தூர், ஏப்.20:  ஆத்தூர் அருகே போஸ்ட் மாஸ்டர் வீட்டில், மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 42 பவுன் நகை திருடு போனது தொடர்பாக, வீட்டில் வெள்ளையடிக்க வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் அம்மம்பாளையம் தேரடி வீதியில் வசிப்பவர் முருகானந்தம்(57), முல்லைவாடி பகுதி தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி குணசுந்தரி (55). ஆத்தூர் அருகே ஈச்சம்பாடி ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்ட மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு அருண்பாரதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அருண்பாரதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் உள்பட 3 பேர், கடந்த 17ம் தேதி முதல் 4 நாட்களாக, முருகானந்தம் வீட்டில் வெள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை கள்ளக்குறிச்சியில் உள்ள மாப்பிள்ளை வீட்டுக்கு செல்வதற்காக தயாரான குணசுந்தரி, வீட்டில் மகள் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த காசுமாலை, நெக்லஸ், 8 தோடுகள் உள்பட 42 பவுன் நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து கணவரிடம் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் ரூரல் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரித்தனர். இதனிடையே, மணிமாறனுடன் வெள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர், திடீரென மாயமாகி விட்டனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார், மணிமாறனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>