சேலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மண்டை ஓடு மூலம் மரபணு சோதனை நடத்த முடிவு கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு

சேலம், ஏப்.20:  சேலத்தில்  இளம்பெண் கொலை வழக்கில் கைதான வாலிபர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மரபணு சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். சேலம் நரசோதிப்பட்டி பெருமாள் மலை அடிவாரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 30ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை. எல்லா இடங்களிலும் தேடி பார்த்தபோது கண்டு பிடிக்க முடியாததால் கணவர் முருகன் கருப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து ராஜேஸ்வரியை தேடி வந்தனர். இதனிடையே கடந்த 11ம் தேதி டால்மியாபுரம் பர்ன் அன்கோ அருகே எலும்புக்கூடு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்று விசாரித்தனர். அந்த எலும்புக்கூடு கிடந்த இடத்தில் புடவை இருந்ததால் பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்நிலையத்தில் பதிவான காணாமல் போனவர்களின் பட்டியலின் அடிப்படையில் ராஜேஸ்வரியின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு ராஜேஸ்வரியின் தாய் மற்றும் கணவர் ஆகியோர் வந்தனர்.

அப்போது ராஜேஸ்வரியின் தாய், நான் எனது மகளுக்கு வாங்கி கொடுத்த சேலை தான் என கதறி அழுதார். இதையடுத்து ராஜேஸ்வரியின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், வெள்ளக்கல் பட்டியை சேர்ந்த பிரபாகரன்(32) என்பவர் ராஜேஸ்வரியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், உல்லாசத்திற்கு பணம் கேட்டதால் கல்லால் தாக்கி கொலை செய்தேன் . பின்னர் அவர் அணிந்திருந்த தாலி, தோடு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதனை அடகு வைத்து ₹7 ஆயிரம் பெற்றுக்கொண்டேன்’ என கூறியுள்ளார். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்செங்கோடு சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இறந்து போனது ராஜேஸ்வரிதானா? என்பதை கண்டு பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே அங்கு கிடந்த மண்டை ஓடு, எலும்பு துண்டுகள் எல்லாம் எடுக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதை மரபணு பரிசோதனை நடத்துவதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ராஜேஸ்வரியின் தாயின் ரத்தத்தையும் எலும்பில் உள்ள அணுவையும் எடுத்து பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்பிறகே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: