×

கொரோனா தடுப்பு நடவடிக்கை டூவீலரில் 2 பேருக்கு மேல் சென்றால் ₹500 அபராதம்

நாமக்கல், ஏப்.20: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, டூவீலரில் 2 பேருக்கு மேல் சென்றால் ₹500 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்,  கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, அவர் பேசியதாவது:
கடந்த ஆண்டில் கொரோனா நோய்த்தொற்றின் போது, அதிகபட்ச எண்ணிக்கையாக 150 வரையிலும் பாதிப்பிற்குள்ளாகினர். தற்போது, ஆரம்ப நிலையிலேயே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, உள்ளாட்சி நிர்வாகங்கள் தங்கள் வசம் உள்ள வாகனங்களில் கொரோனா விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில், பொது அறிவிப்பு உபகரண வசதிகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் வெளியில் வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரையும், கொரோனா தொற்று பாதித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உள்ளாட்சி நிர்வாகங்கள், வருவாய்த்துறை, காவல்துறையினர் இணைந்து, கொரோனா நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். ஒரு தெருவில் 3 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டிருந்தால், கட்டுப்பாட்டு பகுதியாக கடைப்பிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்று வரும் நபர்களின் பட்டியலை தயார் செய்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இருசக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் சென்றால் ₹500 வீதம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொரோனா நோய்த்தொற்று தீவிரமாவதை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. விதிமுறைகளை பின்பற்றாத நிலையில், கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் பொறுப்புணர்ந்து அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார். கூட்டத்தில் டிஆர்ஓ துர்காமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, பேரிடர் மேலாண்மை தாசில்தார் பச்சைமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Corona ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...