சாலை விதிகள் குறித்து படங்களுடன் விழிப்புணர்வு

தர்மபுரி, ஏப்.20: தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலக சுற்றுச்சுவரில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து படங்களுடன் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதியிருப்பது பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் வகையில், தமிழக போக்குவரத்துறை சார்பில் ஒரு மாதத்திற்கு சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் டூவீலர், 4 வீலர் பேரணி, கண் சிகிச்சை முகாம், மரக்கன்று நடுதல், நோட்டீஸ் வினியோகம் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் காம்பவுண்ட் சுவற்றின் உள்புறத்தில், பொதுமக்களின் பார்வையில் படும் வகையில், விழிப்புணர்வு படங்கள் மற்றும் வாசகங்களை வரைந்து வைக்க வேண்டும் என போக்குவரத்து கமிஷனரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் காம்பவுண்ட் சுவற்றின் உள்புறத்தில், ‘போதிய இடைவெளி விட்டு பின் தொடரவும். மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்கினால் சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றக்கூடாது. அவசர ஊர்தி வாகனங்களுக்கு வழி கொடுக்க வேண்டும். பஸ் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது. சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றக்கூடாது என்பது உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களுடன் விழிப்புணர்வு வாசகங்கள், காம்பவுண்ட் சுவற்றில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதை நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சாலை போக்குவரத்து மாத விழாவின் ஒரு பகுதியாக, தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் அரூர் யூனிட் அலுவலகத்தின் சுற்றுச்சுவர்களில் இந்த அலுவலகங்களுக்கு லைசன்ஸ், புதுப்பித்தல், புதிய வாகன பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு, சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த படங்கள் வரையப்பட்டுள்ளன,’ என்றார்.

Related Stories:

>