×

2,000 டோஸ் நெல்லையில் இருந்து வரவழைப்பு குமரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிப்பு


நாகர்கோவில், ஏப்.20 :  குமரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடித்து வருகிறது. நிலைமையை சமாளிக்க சுகாதாரத்துறையினர் திணறி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்குகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதலில் டாக்டர்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 45 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் தயக்கம் காட்டிய பொதுமக்கள் தற்போது கொரோனா தடுப்பூசி போட குவிந்த வண்ணம் உள்ளனர். குமரி மாவட்டம் முழுவதும் இதுவரை 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நிலைமையை சமாளிக்க முடியாமல் சுகாதாரத்துறை, மருத்துவத்துறையினர் திணறி வருகிறார்கள்.

முதற்கட்டமாக வெளி மாவட்டங்களில் இருந்து தடுப்பூசியை பெற்று வருகிறார்கள். கடந்த இரு நாட்களுக்கு முன், 3,400 டோஸ் தூத்துக்குடியில் இருந்து பெறப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில்,  2,000 டோஸ் கொரோனா தடுப்பூசி நெல்லையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை உள்பட அனைத்து மையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நேற்று காலையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் கொரோனா தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். 400 டோஸ் வரை இருந்ததால், முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட்டனர். இந்த தடுப்பூசிகளும் விரைவில் தீர்ந்தது. பல்வேறு மையங்களில் தடுப்பூசி இல்லாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags : Kumari ,
× RELATED குமரியில் தொடர்ந்து பெய்யும் சாரல்...