×

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு குமரிக்கு தேவையான தடுப்பூசிகளை அனுப்பாவிட்டால் போராட்டம்

நாகர்கோவில், ஏப்.20: குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. தடுப்பூசி தட்டுப்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மத்திய அரசும் தமிழக அரசும் சேர்ந்து கொரோனவை கட்டுப்படுத்துவதற்கு என்று பல்வேறு அறிவிப்புகளை ஆணையாக வெளியிடுகிறார்கள். ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மக்களை ஏமாற்றுகிறதா என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனை, 9 அரசு மருத்துவமனைகள், 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  என சுமார் 150 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசின் அறிவுரையை ஏற்று ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் தடுப்பூசி போட சென்றால் அங்கு ஊசி மருந்து இல்லை என்று திருப்பி அனுப்பும் நிலை இருந்து வருகிறது. மேலும் தடுப்பூசி இல்லை என்று பல மையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலை தொடர்வதும் மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசியை மாநில அரசு அனுப்பி வைக்காமல் இருப்பதும் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பாக அமைந்து விடும்.
எனவே குமரி மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளை அனுப்பி வைக்காவிட்டால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kumari ,
× RELATED கொரோனாவில் இருந்து மீண்ட பாஜக மாஜி அமைச்சர் தூக்கிட்டு தற்கொலை