தந்தை திட்டியதால் மனவேதனை மகள் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, ஏப். 19:திருச்சி திருவானைக்காவல் நடுகொண்டையம்பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் இளையராஜா. அந்த பகுதியில் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் மகள்களுடன் வசித்து வருகிறார்.இதில் இவரது மகள் கஸ்தூரி(16). 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு போதையில் வந்த இளையராஜா, மகள் கஸ்தூரியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரவு முழுவதும் மனவேதனையில் இருந்த கஸ்தூரி, நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ரங்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக்கில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி: திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை கீழகுறிச்சி வசந்தம் நகரை சேர்ந்தவர் கருணாகரன் (58). பெயிண்டர் .நேற்று முன்தினம் வேலை முடித்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது டிவிஎஸ் டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கருணாகரன் இறந்தார். இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: துறையூர் அருகே அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவாணன் மனைவி சாந்தி (60). இவர் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் வீட்டை பூட்டி விட்டு மளிகை சாமான்கள் வாங்க துறையூருக்குச் சென்றார். மதியம் 12 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த ரூ50 ஆயிரம், ஒன்றரை பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து சாந்தி துறையூர் போலீசில் புகார் அளித்தார்.. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

டூவீலர் திருடிய இருவர் கைது: துறையூர் அருகே ஆத்தூர் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே டூவீலரில் சென்ற 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்களை துறையூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மயில்சாமி மகன் சந்தோஷ் (19) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சூரியபிரகாஷ் (19) என்பதும் துறையூர் காவல்நிலையத்தில் டூ வீலர் காணாமல் போனதாக துறையூர் மாருதி நகரைச் சேர்ந்த சக்திவேல் (35), கோவிந்தபுரத்தைச் சேர்ந்த அற்புதராஜ் (33) ஆகியோர் கொடுத்திருந்த புகாரில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சந்தோஷ், சூரியபிரகாஷ் ஆகியோரிடமிருந்து டூவீலரை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர். வாலிபரிடம் பணம் பறித்த ரவுடி கைது: திருச்சி மேலகல்கண்டார் கோட்டை தமிழர் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (23). இவர், கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சைக்கிளில் நேற்றுமுன்தினம் சென்றார். முன்னாள் ராணுவத்தினர் காலனி அருகே இருதய ஆண்டவர் கோயில் அருகே சென்றபோது வாலிபர் ஒருவர் வந்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.550யை பறித்து சென்றார. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த பொன்மலை போலீசார் பணம் பறித்து சென்ற பொன்மலை கணேசபுரத்தை சேர்ந்த ரவுடி பிரபுவை (31) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மகேஸ்வரன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 18 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூதாட்டி பலி: திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தஞ்சாவூர் பஸ் நிற்கும் பகுதியில் கடந்த 2ம் தேதி நின்று கொண்டிருந்த சுமார் 70 வயது மதிக்கதக்க மூதாட்டி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 16ம் தேதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோ.அபிஷேகபுரம் விஏஓ செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த கண்டோன்மென்ட் போலீசார் இறந்த மூதாட்டி யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற ரவுடி கைது: திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த தொழிலாளி பெரியசாமி (50). இவர் நேற்றுமுன்தினம் திருவானைக்காவல் மெயின்ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார். அப்போது ரங்கம் டிரைனேஜ் தெரு கீழவாசலை சேர்ந்த ரவுடி மகேஸ்வரன் (27) என்பவர் வந்து பெரியசாமியிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டினார். இது குறித்து ரங்கம் போலீசாருக்கு பெரியசாமி தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மகேஸ்வரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மகேஸ்வரன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 18 வழக்குகள் உள்ளது.

இன்ஜினியர், கட்டிட உரிமையாளர் மீது வழக்கு: ஜீயபுரம் அருகே திருப்பராய்த்துறை பெரியார் நகரை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகன் கார்த்திக் (20). கல்லூரி மாணவர். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இதில் கடந்த 16ம் தேதி திருச்சி பாலக்கரை எடத்தெரு ரோடு சன்னதி தெருவில் ஒரு வீட்டில் சாரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் மின்சார கம்பத்திலிருந்த கம்பியின் மீது இவரது பின்னந்தலை உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட கார்த்திக் பலத்த காயம் அடைந்தார். தொடர்ந்து உடன் வேலை பார்த்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அன்று இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து தாராநல்லூரை சேர்ந்த இன்ஜினீயர் முரளி, கட்டிட உரிமையாளர் சந்திரசேகர் ஆகியோர் மீது பாலக்கரை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது: இனாம்குளத்தூர் அருகே உள்ள பாகனூர் பூங்குடி பெருமாள் நகரை சேர்ந்தவர் ஆனந்த் மனைவி புனிதா (30). கட்டிட தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் வேலை முடிந்து மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் இனாம் குளத்தூர் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், புனிதா கழுத்தில் கிடந்த 1 பவுன் செயினை பறித்துக்கொண்டு ஓடினார். புனிதாவி–்ன் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரட்டிச்சென்று அந்த வாலிபரை பிடித்தனர். பின்னர் அவரை, கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் திருவெறும்பூர் அண்ணா நகர் போலீஸ் காலனியை சேர்ந்த பாலமுருகன் (25) என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து செயினை கைப்பற்றிய போலீசார் வழக்குபதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: