நிறுத்தப்பட்ட ஊக்க தொகையை நிலுவையுடன் வழங்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி, ஏப்.19: நிறுத்தப்பட்ட ஊக்கத் தொகையை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் ஊழியர் சங்க 6வது மாவட்ட பேரவை கூட்டம் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாப்பையன் தலைமை வகித்தார். செயலாளர் லெனின் வேலை அறிக்கையும், பொருளாளர் அசோக்ராஜ் வரவு, செலவு கணக்கையும் படித்தனர். சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகையன் பேரவை கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் பொதுச்செயலாளர் திருச்செல்வன் சிறப்புரையாற்றினார்.

இதில் சிஐடியூ மாவட்ட தலைவர் மாலதி, பொருளாளர் பாண்டியன், துணைச்செயலாளர் வைத்தியநாதன், துணைத்தலைவர் ராமச்சந்திரன், லிகாய் முகவர் சங்க கோட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பேசினர். இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துவேல், செந்தில், முருகையன், குமார், துணைச்செயலாளர்கள் சிவபாலன், ரகு, சந்திரன், மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை இறுதிப்படுத்தி பணிமூப்பு அடிப்படையில் கடைப்பணி, மாற்றுப்பணி வழங்க வேண்டும். சுழற்சிமுறை பணிமாறுதல் வழங்க வேண்டும். 18 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்களுக்கு பணியை வரைமுறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு சிறப்பு பணமுடிப்பு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கான அரசாணையை அமல்படுத்த வேண்டும். நிறுத்தப்பட்ட ஊக்கத் தொகையை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: