கோட்டூர் அருகே மகளின் கழுத்தை அறுத்த ‘பாசக்கார’ தந்தை கைது

மன்னார்குடி, ஏப்.19: கோட்டூர் அருகே மகளின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் அடுத்த கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தான் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (42). இவர் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுமதி(37) என்ற மனைவியும், பிரியா(21), சத்யப்பிரியா(19) என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் பிரியாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. மது குடிக்கும் பழக்கம் உள்ள செல்வராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதால் உடலநலம் சரியில்லாத சுமதி தனது மகள் சத்யப்பிரியாவுடன் அருகில் வேறொரு வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், சத்யப்பிரியாவுக்கு திருமணம் செய்து வைக்க சுமதி மற்றும் அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். நேற்று மாப்பிளை வீட்டார் பெண் பார்க்க வருவதாக இருந்தது. தனக்கு தெரியாமல் திருமண ஏற்பாடு நடப்பதை அறிந்த செல்வராஜ், மனைவி மற்றும் மகள் மீது கடும் கோபத்தில் இருந்தாக கூறப் படுகிறது. நேற்று முன்தினம் சத்யப்பிரியா தனது தந்தை வசிக்கும் வீட்டிற்கு ரேஷன் கார்டை எடுக்க வந்தார். அப்போது இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், பெற்ற மகள் என்று பாராமல் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகளின் கழுத்தை அறுத்தார்.

இதில் படுகாயமடைந்த சத்யப்பிரியா அலறிக்கொண்டே அங்கிருந்து தப்பித்து அருகில் இருந்த பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்திற்கு சென்று மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் ஹேமலதா உள்ளிட்ட போலீசார் சத்யப்பிரியாவை மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக்காக அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிபதி உத்தரவின் பேரில் அவரை போலீசார் மன்னார்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

பெற்ற மகளை தந்தையே கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெருகவாழ்ந்தானில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: