திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் கழிவுநீர் கலப்பு தடுத்து நிறுத்த பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தல்

திருவாரூர், ஏப்.19: திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் நகராட்சியின் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகன் வலியுறுத்தியுள்ளனர். 30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகராட்சி பகுதியில் தற்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி மூலம் நகரில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலானது கழிவுநீர் செல்லும் சாக்கடையாகவே இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக இவ்வாறு இருந்து வரும் நிலையில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கும் பட்சத்தில் இந்த கழிவுநீர் அனைத்தும் பாதாள சாக்கடைக்கு சென்றுவிடும் என்று நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த பாதாள சாக்கடை திட்டமானது உரிய தரத்துடன் மேற்கொள்ளப்படாததன் காரணமாக மழை காலம் உட்பட பெரும்பாலான நேரங்களில் கழிவுநீரானது வீடுகளுக்குள் புகும் நிலை இருந்து வருவதால் இந்த திட்டத்தில் இணைப்புகளை பெறுவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக தற்போது வரையில் நகரில் மழைநீர் வடிகால் என்பது கழிவுநீர் செல்லும் சாக்கடையாகவே இருந்து வருகிறது. மேலும், இந்த மழைநீர் வடிகால்கள் அனைத்தும் அதன் முடிவில் ஏதாவது ஒரு பாசன வாய்க்கால் அல்லது பாசன ஆறுகள் ஆகியவற்றில் முடியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த கழிவுநீர் அனைத்தும் தற்போது வரையில் நகரில் செல்லும் பி.சேனல் பாசன வாய்க்கால், பழவனக்குடி பாசன வாய்க்கால் உட்பட பல்வேறு வாய்க்கால்களில் கலந்துவருகின்றன.

இதே போல ஓடம்போக்கி ஆறு என்பது திருவாரூர் அருகே எண்கன் என்ற இடத்தில் வெட்டாற்றிலிருந்து பிரிந்து அம்மையப்பன், திருவாரூர், கிடாரங்கொண்டான், ஆண்டிபாளையம் ஆகிய ஊர்கள் வழியாக நாகை மாவட்டத்திற்கு செல்கிறது. இந்நிலையில் இந்த பாசன ஆறானது திருவாரூர் நகரை ஓட்டியவாறு செல்வதால் நீர் வரும் காலங்களில் நகரில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் இந்த ஆற்றுநீரினை குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஓடம்போக்கி ஆற்றில் நகராட்சியின் கழிவுநீர் கலப்பதால் இந்த நீரினை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் உடலில் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருவதால் இந்த ஆற்று நீரினை பயன்படுத்த பொதுமக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இந்த கழிவுநீர் கலப்பதனை தடுப்பதற்கு நகராட்சி நிர்வாகமும், பொதுப்பணித்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>