×

மீன்பிடி தடைக்காலத்திற்கு ரூ.30 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும்

சேதுபாவாசத்திரம், ஏப்.19: மீன்பிடி தடை காலத்திற்கு இந்த ஆண்டு ரூ.30 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என தமிழ்மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய மாநில அரசுகள் மீன் இனப்பெருக்க காலம் எனக்கூறி ஆண்டுதோறும் விசைப்படகுகளுக்கு ஏப்ரல் 14 நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து வருகிறது. அதேசமயம் கடந்த ஆண்டு உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால். தமிழகத்தில் மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு அறிவித்தது.

முழு ஊரடங்கால் மற்றும் தடைக்காலத்தால் விசைப்படகு மீனவர்களுக்கு 135 நாட்களுக்கு மேல் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது. எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு இந்த ஆண்டு மீன்பிடி தடை காலம் தேவையில்லாத ஒன்று. சேதுபாவாசத்திரம், கள்ளிவயல் தோட்டம், மல்லிப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் சுமார் 300 விசைப்படகுகள் இருந்த இடத்தில் தற்போது 146 படகுகள் மட்டுமே உள்ளது. மற்றவர்களுக்கு படகு வாங்க வழியில்லை. அதேசமயம் தடை காலத்திற்கு விசைப்படகு மீனவர்களுக்கு நிவாரண உதவி தொகை அரசு ஆண்டுதோறும் குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது.

அந்த நிவாரண தொகையை இந்த ஆண்டு வழக்கம்போல் மீனவர் குடும்பத்திற்கு வழங்கக்கூடிய உதவி தொகையை குடும்ப வாரியாக வழங்காமல். ஒவ்வொரு குடும்பத்திற்கும் உள்ள நபர் வாரியாக நபர் ஒன்றிற்கு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். இல்லையேல் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க வில்லை என்றால் மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் தடைக்காலத்தை 45 நாட்களாக குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையேல் மீனவர்கள், மீன் வியாபாரிகள், கருவாடு வியாபாரிகள், துறைமுகங்களில் கடை வைத்து தொழில் செய்பவர்கள், ஐஸ் கம்பெனி மற்றும் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரம் பேர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ