பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் மூடப்படும் சுற்றுலா தலங்கள்

பெரம்பலூர்,ஏப்.19: கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (20ம்தேதி) முதல் சுற்றுலா தலங்கள் மறுதேதி அறிவிக்காமல் மூடப்படுகிறது. 2020ம் ஆண்டு உலகையே அச்சுறுத்தி பரவிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலையாக அதிவேகமாக பரவி வருகிறது. இதனையொட்டி ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவில் படிப்படியாக ஓராண்டில் தளர்த்தப்பட்டிருந்த சில கெடுபிடிகளை மீண்டும் தமிழக அரசு நாளை (20ம் தேதி) முதல் அமலுக்கு கொண்டு வருவதாக நேற்று (18ம்தேதி) மாலை அறிவித்துள்ளது.

இதன்படி அனைத்து சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல 20ம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. பூங்காக்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் அகழ்வைப்பகங்கள், அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி கிடையாது என அரசு அறிவித்துள்ளது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சரித்திர புகழ்பெற்ற வால்கொண்டா போர் நடைபெற்ற ரஞ்சன்குடி கோட்டை, கடந்த 2015ம் ஆண்டு வேப்பந்தட்டை தாலுகா விசுவக்குடி பகுதி பச்சைமலை தொடர்ச்சியில், பச்சைமலை-செம்மலை ஆகிய 2 மலைக்குன்றுகளை இணைத்து கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள விசுவக்குடி அணைக்கட்டு, லாடபுரம் மயிலூற்று, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவில், செட்டிக்குளம் அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ஆகிய பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள் அனைத்தும் நாளை (20ம்தேதி) முதல் மறு தேதி அறிவிக்கப்படும் வரை தமிழக அரசு உத்தரவால் மூடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More