பெரம்பலூரில் குளிர்ச்சிக்கு அருமருந்தான முலாம்பழம் விற்பனை படுஜோர்

பெரம்பலூர்,ஏப்.19: பெரம்பலூரில் குளிர்ச்சிக்கு அருமருந்தான முலாம்பழம், தர்பூசணி விற்பனை படுஜோராக நடக்கிறது. குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் மோர், சர்பத், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான குளிர் பானங்களை அருந்தி சூட்டை தணிக்க போராடி வருகின்றனர். ஏற்கனவே பிப்ரவரி மாதம் முதல் திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்து சாலையோரங்களில் மழைபோல் குவிக்கப்பட்டு தர்பூசணி விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. அதற்கு போட்டியாக சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வெள்ளரிப்பிஞ்சு விற்பனையும் வெகு ஜோராக நடந்து வருகிறது.

வருடத்தில் முக்கால்வாசி மாதங்களில் இளநீர் விற்பனை விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் தற்போது கோடை வெப்பத்தை சமாளிக்க சேலம் மாவட்டம், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் பகுதிகளிலிருந்து முலாம் பழங்கள் மினி வேன்களில் வண்டி வண்டியாக கொண்டு வந்து சாலையோரங்களில் வாகனங்களில் வைத்தபடியே 100 ரூபாய்க்கு 4 கிலோ என விற்பனை நடந்து வருகிறது. சுவையாகவும், சூட்டைத் தணிக்கும் மருந்தாகவும் குறைந்த விலையிலும் கிடைப்பதால் முலாம் பழத்தை வாங்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வியாபாரிகள், வாகனங்களில் மைக்செட் கட்டி 4 கிலோ 100 ரூபாய் என கூவிக்கூவி விற்பனை செய்து வருகின்றனர். இன்னும் இவைகளுக்கு போட்டியாக நுங்கு விற்பனை அதிகரிக்காததால் தர்பூசணியும், முலாம் பழமும் போட்டி போட்டுக்கொண்டு விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் தர்பூசணி கிலோ ரூ.15க்கும், ரூ. 20க்கும் விலை வைத்து விற்கப்படுகிறது. இதன்படி 1 பழம் 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விலை வைத்து விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Related Stories: