கரூரில் இரவில் பரபரப்பு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

கரூர், ஏப்.19: வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. காலையில் கரூர் மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதிகளுக்கும், மதியம் கிருஷ்ணராயபுரம் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்குமான அலுவலர்களுக்கு இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணியில் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் 64 நபர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் 62 நபர், நுண்பார்வையாளர்கள் 64 நபர் என ஈடுபடவுள்ளனர்.

இந்த பயிற்சி வகுப்பில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது: மே 2ம்தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின்போது பணியில் உள்ள அலுவலர்கள் அனைவரும் காலை 5 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் இருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான அடையாள அட்டையினை கட்டாயம் அணிந்து வர வேண்டும். அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள அனைத்து நெறிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.

செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எதுவும் கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது. வாக்கு எண்ணிக்கைக்கு 24 மணி நேரத்துக்கு முன் நடைபெறும் கணினி முறை குலுக்கலில் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் பணிபுரிய வேண்டிய சட்டமன்ற தொகுதிகளில் இறுதி செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடவிருக்கும் டேபிள் எண் ஒதுக்கீடு செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி மற்றும் டேபிள்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சென்று விட வேண்டும்.

வாக்குச்சாவடி மைய எண்கள் அடங்கிய பட்டியல் ேடபிளில் ஒட்டப்பட்டிருக்கும். அதனடிப்படையில், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் பதிவான ஓட்டுகள் அடங்கிய கட்டுப்பாட்டுக் கருவிகள் வாக்கு எண்ணிக்கைக்காக வழங்கப்படும். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை டேபிளிலும் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் வாக்கு எண்ணிக்கை உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் பணியில் இருப்பார்கள். அஞ்சல் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், 2 வாக்கு எண்ணிக்கை உதவியாளர், 1 நுண்பார்வையாளர் பணியில் அமர்த்தப்படுவார்கள். அதிகபட்சம் 4 அஞ்சல் வாக்கு எண்ணிக்கை டேபிள்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு டேபிளிலும் 500 அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 2ம்தேதி காலை 8 மணி வரை பெறப்படும் அஞ்சல் வாக்குகள் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும். நேரத்திற்கு பின்னர் பெறப்படும் அஞ்சல் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பன போன்ற பல்வேறு விதிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன. இந்த பயிற்சி வகுப்பில் கூறப்படும் தகவல்களை கவனமாக கேட்டுக்கொண்டு, நடைபெறவுள்ள வாக்கு எண்ணும் பணியில் உங்கள் ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தை உணர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயிற்சி வகுப்பில் டிஆர்ஓ லியாகத், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கான சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷாஜஹான் உட்பட அனைவரும் உடனிருந்தனர்.

Related Stories:

>