×

ரயில்வே ஸ்டேஷனில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

ஈரோடு, ஏப். 19: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. நாடு  முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா  பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் எடுத்து  வருகிறது. அதன்படி, பொதுமக்கள் வெளியில் செல்லும்போது, கண்டிப்பாக முகக்கவசம்  அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கிருமி  நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து  வலியுறுத்தி வருகிறது. மேலும், கொரோனா விதிமுறைகளை  பின்பற்றாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  ரயில்வே ஸ்டேஷனிலும், ரயில்களிலும் பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால்  ரூ.500 அபராதம் விதிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் நேற்று முன்தினம்  உத்தரவிட்டது. இதன்பேரில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் பரிசோதகர்கள்  நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முகக்கவசம் அணியாமல்  வந்தவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து டிக்கெட் பரிசோதகர் ஒருவர் கூறியதாவது: ஈரோடு  ரயில்வே ஸ்டேஷனுக்கு முகக்கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கும்,  முறையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கும் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை முதல் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு  அபராதம் விதித்துள்ளோம். இன்று (நேற்று) 100க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு  அபராதம் விதித்துள்ளோம். இதேபோல், பயணச்சீட்டு இல்லாதவர்களுக்கும், அபராதம்  வசூலிக்கப்படுகிறது. பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காமல் வருபவர்களை  ரயில்வே போலீசில் ஒப்படைத்து, அவர்கள் மூலம் அபராதமும், தண்டனை  விதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED முககவசம் அணியாத 366 பேர் மீது வழக்கு