×

திருப்போரூர் ஒன்றியம் மயிலை ஊராட்சி செயலர் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை

திருப்போரூர், ஏப்.19: திருப்போரூர் ஒன்றியத்தில், மயிலை ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் நடந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருப்போரூர் ஒன்றியம் மயிலை ஊராட்சியில் கடந்த 1 ஆண்டாக முறையான குடிநீர் விநியோகம் இல்லை என கூறியும், இதைக் கேட்கும்போது ஊராட்சி செயலாளர் முனுசாமி என்பவர் பொதுமக்களை அவதூறாக பேசுவதாகவும் கூறி, கடந்த 2 நாட்களுக்கு முன் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சைமன் ஜெரால்டு, முற்றுகையிட்ட பெண்களிடம், சமரச பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வினியோகம் செய்யும் மோட்டாரில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், அது சரி செய்யப்படும் வரை டிராக்டர் மூலம் தெருக்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் ஊராட்சி செயலாளர் முனுசாமி நேற்று காலை 11 மணியளவில் மயிலை ஊராட்சியில் டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர், இவ்வாறு குடிநீர் விநியோகம் செய்வதற்கு மட்டும் பணம் எப்படி வந்தது. அந்த பணத்தை வைத்து மோட்டாரை சரி செய்து இருக்கலாமே என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதத்தில் லோகநாதன் என்பவர், ஊராட்சி செயலாளர் முனுசாமியை தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி செயலாளர் முனுசாமி, திருப்போரூர் போலீசில் புகார் அளித்தார். திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Thiruporur Union ,Mayilai Panchayat ,
× RELATED நாளை உள்ளாட்சித் தேர்தல் வாக்கு...