திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் ஏமாற்றம்

திருவள்ளூர், ஏப்.19: திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் நேற்று மருத்துவமனைக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்குகள் என மொத்தம் 120 மையங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 10 தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட்டு கொள்ள சுகாதார துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று காலை 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது தடுப்பூசி தட்டுப்பாடு என கூறி தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு ஊழியர்கள், பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கினர். இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜவகர்லாலிடம் கேட்டபோது, “நேற்று மட்டும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே உடனடியாக 4 ஆயிரம் தடுப்பூசிகள் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் முன் கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தாத இடங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்,” என்றார்.

Related Stories:

>