ரயிலில் பணப்பையை தவற விட்ட வங்கி மேலாளர்: பத்திரமாக ஒப்படைத்த போலீசார்

திருவள்ளூர், ஏப்.19: அம்பத்தூரை சேர்ந்தவர் சங்கர்(49). இவர் திருவள்ளூரில் உள்ள காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை தனது மனைவி மற்றும் மகளுடன் திருப்பதி செல்வதற்காக திருவள்ளூருக்கு மின்சார ரயிலில் பயணம் செய்தார். திருப்பதி செல்வதற்காக கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிப்பதற்காக திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கினார். அப்போது ₹50 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்த தனது பேக்கை மின்சார ரயிலிலேயே மறந்து விட்டு, விட்டு இறங்கி விட்டார். பின்னர் ரயிலை பிடிப்பதற்காக நடந்து  சென்றபோது தான் பணம் வைத்திருந்த பேக்கை மறந்து வைத்துவிட்டு வந்தது அவருக்கு ஞாபகத்துக்கு வந்தது. உடனே ஓடிச்சென்று அந்த ரயிலை பார்த்தபோது அதற்குள் அந்த மின்சார ரயில் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்று விட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கர் இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற மின்சார ரயிலின் விவரங்களைக் கேட்டு திருவள்ளூரில் இருந்து 5வது ரயில் நிலையமான நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் இருந்த காவலர் ஜனார்த்தனன் என்பவரிடம் தகவல் தெரிவித்தனர். அந்த ரயில் நெமிலிச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்து நின்றதும் அவர் உட்கார்ந்து வந்த பெட்டியில் ஏறி காவலர் ஜனார்த்தனன் பேக்கை தேடினார். அப்போது, அந்த பணம் வைத்திருந்த பேக் அதே சீட்டிலிருந்ததை கண்டு கைப்பற்றினார். இதனையடுத்து காவலர் ஜனார்த்தனன் மின்சார ரயிலை பிடித்து திருவள்ளூருக்கு சென்று ரயில்வே போலீசாரிடம் கொடுத்தார்.அதன் பிறகு ரயில்வே போலீசார் சங்கரிடம் பணம் இருந்த பேக்கை நல்லமுறையில் ஒப்படைத்தனர்.

Related Stories: