விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா 2வது அலை அபாயம் கோவிசீல்டு தடுப்பூசி பூஜ்யம் கோவாக்சின் 6 ஆயிரம் டோஸ்

விருதுநகர், ஏப்.19: விருதுநகர் மாவட்டத்தில் கோவிசீல்டு தடுப்பூசி முற்றிலும் தீர்ந்து போன நிலையில், கோவாக்சின் தடுப்பூசி போட வேண்டிய நபர்களுக்கு மட்டும் 6ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் இருப்பு இருப்பதாகவும், புதிய நபர்களுக்கு தடுப்பூசி போட மருந்து இருப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்ட மக்கள் தொகை சுமார் 20 லட்சம் பேரில், இதுவரை 17,615 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 235 பேர் அதிகாரப்பூர்வமாக உயிரிழந்துள்ளனர். 500 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா 2வது அலைப்பரவல் அதிகரிப்பால் தினசரி 100 முதல் 150 பேர் புதிதாக தொற்று பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். கொரோனா அதிவேகமாக பரவுதால் 45 வயதிற்கு மேற்பட்டோர் உடனே தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுவதாலும், அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போட மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 26 அரசு மருத்துமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 5 தனியார் மையங்களிலும், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 41 அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 19 தனியார் மையங்கள் என 91 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

கோவிசீல்டு தடுப்பூசி மட்டும் மாவட்டத்திற்கு அனுப்பட்ட நிலையில், கோவாக்சின் தடுப்பூசி அத்தி பூத்தது போல் எப்போதாவது சில நூறு டோஸ்கள் என வாரத்திற்கு 15 ஆயிரத்திற்கும் குறைவாக தடுப்பூசிகள் வந்து கொண்டிருந்தது.20 லட்சம் பேரில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 500 பேருக்கு மட்டும் நேற்று வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 16,500 பேர் மட்டும் இரு டோஸ்களை போட்டுள்ளனர். தடுப்பூசி திருவிழா ஏப்.11ம் தேதி முதல் 14ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டாலும், விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியிடாமல், ஏற்கனவே போடப்பட்ட மையங்களில் மட்டும் தலா 50 தடுப்பூசியை ஒப்புக்கு போட்டு முடித்து விட்டனர்.

வரும் நாட்களில் மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களில் போடுவதற்கான மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மற்றும் சிவகாசி சுகாதார மாவட்டங்களில் 91 மையங்களில் போடுவதற்கு கோவிசீல்டு தடுப்பூசி ஒன்று கூட இருப்பு இல்லை. கோவாக்சின் தடுப்பூசியும் 6 ஆயிரம் டோஸ்கள் மட்டும் இருப்பில் உள்ளது. கோவாக்சின் தடுப்பூசியும் ஏற்கனவே முதல் டோஸ் போட்டவர்களுக்கு மட்டும் இரண்டாவது டோஸ் போட மட்டுமே இருப்பு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 91 மையங்களிலும் இன்று புதிதாக வருவோருக்கு தடுப்பூசி போடுவதற்கான மருந்துகள் இல்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், `` மாவட்டத்தில் கோவிசீல்டு தடுப்பூசி மருந்து அதிகமாகவும், கோவாக்சின் தடுப்பூசி குறைவான எண்ணிக்கை என வாரம் 15 ஆயிரம் தடுப்பூசிக்கான மருந்துகள் மட்டும் வந்து கொண்டிருந்தது. அதிலும் தற்போது கோவிசீல்டு தடுப்பூசி மருந்து முற்றிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. கோவாக்சின் தடுப்பூசி மருந்து 6 ஆயிரம் டோஸ்கள் மட்டும் வந்துள்ளது. அதுவும் கோவாக்சின் இரண்டாவது தவணை போடும் நபர்களுக்கு மட்டும் போடப்படும். புதிதாக கோவிசீல்டு மற்றும் கோவாசின் தடுப்பூசி மருந்துகள் மத்திய, மாநில மையங்களில் இருந்து அனுப்பப்பட்டால் மட்டுமே புதிய நபர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தனர்.

Related Stories:

More
>