×

மகசூலை பாதிக்கும் வகையில் கத்தரியில் நோய் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை

காரைக்குடி, ஏப்.19:  காரைக்குடி அருகே சாக்கோட்டை, கல்லல் ஒன்றியங்களில் தோட்டக்கலை பயிர்களான கத்தரி, வெண்டை உள்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது கத்திரியில் நோய் தாக்குதல் ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன் கூறுகையில், ‘‘கத்திரியில் தண்டு துளைப்பான் நோய் தாக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கத்தரி நட்ட 15 நாளிலிருந்து 20வது நாளில் தண்டுதுளைப்பான் நோய் வர துவங்கும். இதனை சரியாக கண்டறியா விட்டால் எதிர்காலத்தில் பூ பூத்து காய் காய்க்க ஆரம்பிக்கும் போது காய்களில் காய்த்துளைப்பான உருவெடுத்து சொத்தை கத்தரி காய்கள் உருவாகும்.

தண்டுதுளைப்பானை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு வேப்ப எண்ணெய் 5 மில்லி என்ற அளவில் கலந்து 20லிருந்து 25 நாளைக்கு ஒரு முறை தெளிப்பது நல்ல தீர்வாக அமையும். இந்த வேப்ப எண்ணெய் 20லிருந்து 25 நாளுக்கு ஒரு முறைதான் பயன்படுத்த வேண்டும். வாரம் ஒரு முறையோ அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறையோ பயன்படுத்தினால் செடிகள் மலட்டு தன்மை அடையும். இந்த 20 முதல் 25 நாட்கள் இடைவெளியில் தண்டு மற்றும் காய்த்துளைப்பான் தென்பட்டால் இடையில் வாரம் ஒருமுறை இஞ்சி பூண்டு கரைசல் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 மில்லி என்ற அளவில் எடுத்து தெளிக்கலாம். பூ கொட்டாமல் இருக்க மீன் அமில கரைசல் மற்றும் பஞ்சகாவியா இரண்டையும் சம அளவு கலந்து அந்த கரைசலில் 20 மில்லி எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும். கத்தரியில் கருவுறுதல் ஒவ்வொரு நாளும் 10 மணியிலிருந்து 11 மணிக்குள் நடக்கும். அதற்கு முன்பாக 8 மணியிலிருந்து 9 மணி வரை குளிர்ந்த தண்ணீரை செடிகளில் பனித்துளிப்போல் தெளிப்பதன் மூலம் செடியை சுற்றி இருக்க கூடிய வெப்ப நிலையை குறைத்து கருவுறுதல் சிறப்பாக நடந்து தரமான கத்திரி காய்கள் பெறலாம்’’ என்றார்.

Tags :
× RELATED சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவூர்...