இணைப்பு இல்லாத பகுதிக்கு கூடுதல் குடிநீர் திட்டங்கள் கவனம் செலுத்த கலெக்டர் அறிவுறுத்தல்

சிவகங்கை, ஏப்.19: சிவகங்கை நகராட்சியில் குடிநீருக்கு கூடுதல் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: நகராட்சி நிர்வாகங்கள் பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சிவகங்கையில் குடிநீருக்கான கூடுதல் திட்டங்களை தயாரிப்பதிலும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் பகுதியில் கூடுதல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியத்துறையின் மூலம் பெறக்கூடிய குடிநீர் மட்டுமன்றி ஆழ்துளை கிணறு மூலம் பெறப்படும் குடிநீரும் சேர்த்து வழங்க வேண்டும்.

குடிநீர் வடிகால் வாரிய இணைப்புகள் இல்லாத பகுதிகளில் தேவையான அளவு ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். பற்றாக்குறை வரும் இடங்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக நிறைவேற்றி பணிகளை முடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். குடிநீர்  பைப்லைன்களில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை காலதாமதம் இன்றி சரி செய்ய வேண்டும். இக்கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அய்யனார், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாடசாமி சுந்தரராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் சண்முகம், சிவகங்கை நகராட்சி ஆணையர் அய்யப்பன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>