×

தொடர் மழையால் பாதிப்பு நிலக்கடலைக்கு விலை இருந்தும் மகசூலின்றி விவசாயிகளுக்கு நஷ்டம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்


சாயல்குடி. ஏப்.19: நிலக்கடலைக்கு நல்ல விலை கிடைத்தும், தொடர் மழையால் விளைச்சல் குறைந்து விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அவர்கள், பயிர்காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கார்த்திகை மாதம், கார்த்திகை பட்டத்தில் 105 நாட்களுக்குள் மகசூல் தரக்கூடிய பயிரான நிலக்கடலை பயிரிடப்படுவது வழக்கம். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்தில் எஸ்.தரைக்குடி, செவல்பட்டி, கன்னிராஜபுரம், நரிப்பையூர், கூரான்கோட்டை, பூப்பாண்டியபுரம், பெரியகுளம், கடுகுசந்தை, சத்திரம், மேலச்செல்வனூர், சாத்தங்குடி, காவாகுளம், மேலக்கிடாரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2,500 ஏக்கரிலும், கமுதி அருகே பசும்பொன், மருதகநல்லூர் போன்ற பகுதிகள் உட்பட மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலக்கடலை வளரக்கூடிய விவசாய நிலங்களில் இந்தாண்டு நிலக்கடலை விவசாயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மாவட்டத்தில் டிசம்பர் முதல் ஜனவரி கடைசி வரை தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் நிலக்கடலை பயிரிடப்பட்ட செம்மண் நிலம் உள்ளிட்ட விவசாய நிலங்களில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் சில இடங்களில் நிலக்கடலை பிஞ்சு விட்ட நிலையில் செடி அழுகிபோனது. மற்ற பகுதிகளில் மழைதண்ணீரால் மண் இறுகியது. இதனால் நன்றாக விளைந்த நிலக்கடலையை முழுமையாக பறிக்க முடியாமல் போனது. இதனால் நஷ்டம் ஏற்பட்டு விட்டதால் பயிர்காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து நிலக்கடலை விவசாயிகள் கூறும்போது, இந்தாண்டு நல்ல மழை பெய்ததால் நிலக்கடலை அமோகமாக விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்த்து, கடன் வாங்கி பயிரிட்டு, பராமரிப்பு செய்து வந்தோம். ஆனால் தொடர் மழையால் சில இடங்களில் செடிகள் அழுகி பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் நன்றாக வளர்ந்தது. கடந்த மாதம் முதல் கடலை பறிப்பு நடந்து வருகிறது. ஆனால் நிலக்கடலை பயிரிடக்கூடிய நிலமான செம்மண், இலகுவான மண் பகுதியில் தண்ணீர் தேங்கியது, இதனால் மண் இறுகி காணப்படுவதால் நன்றாக விளைந்த கடலையை கூட முழுமையாக பறிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இந்தாண்டு 80 கிலோ எடையுள்ள மூட்டை ஒன்றிற்கு ரூ.7,200 முதல் 8,800 வரை மொத்த வியாபாரிகள் வாங்குகின்றனர். கிலோ ஒன்றிற்கு ரூ.90 முதல் 110 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது நல்ல விலை என்றாலும் கூட, விளைச்சல் மிக குறைவாகி போனதால் இரண்டு மடங்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது.
இதனால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை