சோழவந்தான் அருகே கொரோனா கட்டுப்பாடுகளால் எளிமையாக நடந்த தேர்பவனி திருவிழா

சோழவந்தான், ஏப். 19: சோழவந்தான் அருகே, ராயபுரத்தில் பழமையான புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 109ம் ஆண்டு திருவிழா கடந்த 9ம் தேதி பங்குத்தந்தைகள் மரியநாதன், பிரான்சிஸ் சேவியர் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி பல்வேறு ஊர் ஆலயப் பங்குத்தந்தையர்களால் ஜெபமாலை திருப்பலிகள் தொடர்ந்து நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் சிறிய மின் அலங்கார தேரில், ஜெர்மேனம்மாள் வீதிகளில் பவனி வந்தார். அப்போது வீடுகள்தோறும் கிறிஸ்தவர்கள் ஜெபம் செய்து வழிபட்டனர். விழாவையொட்டி ரிஷபம் ஊராட்சி தலைவர் சிறுமணி மற்றும் பணியாளர்கள் குடிநீர், சுகாதார ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர். எளிமையாக நடந்த தேர்பவனி: ஆண்டுதோறும் தேர்பவனி கிராமத்தில் மிகவும் சிறப்பாக நடத்தப்படும். இதில் வெளியூரைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஏராளமாக கலந்து கொள்வர். ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களால் கிராமமே உற்சாகத்தில் ததும்பும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் சமூக இடைவெளி, முக்கவசத்துடன் உள்ளூர் பொதுமக்கள் மட்டுமே கலந்து கொண்ட தேர்பவனி திருவிழா மிகவும் எளிமையாக நடந்தது.

Related Stories: