மதுரை திருமங்கலத்தில் போலீசார் அதிரடி மாஸ்க் அணியாத பஸ் பயணிகளுக்கு அபராதம்

திருமங்கலம், ஏப். 19: திருமங்கலத்தில் பஸ்களில் முககவசம் அணியாமல் பயணம் செய்தவர்கள், பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்தவர்கள் என கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். நேற்று ஒரே நாளில் ரூ.30 ஆயிரம் வசூலானது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்,

பஸ்களில் சீட்களில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும். பயணிகள் நின்று கொண்டு பயணம் அனுமதியில்லை என அறிவித்துள்ளது. ஆனால், பொதுமக்களில் பலர் அலட்சியமாக முகக்கவசம் அணியால் சுற்றி வருகின்றனர். இந்நிலையில், திருமங்கலத்தில் இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் நகரில் உள்ள தேவர் சிலை அருகே நின்று விருதுநகர் ரோடு, மதுரை ரோடு, உசிலம்பட்டி ரோடு, விமானநிலைய ரோடு ஆகிய பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வருவோரை நிறுத்தி ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும், அரசு மற்றும் தனியார் பஸ்களில் நின்றபடியும் புட்போர்டில் தொங்கியபடியும் பயணம் செய்தவர்களுக்கும் அபராதம் விதித்தனர். டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கும் அபராதம் விதித்தனர். நேற்று ஒரே நாளில் அபராதம் மூலமாக ரூ.30 ஆயிரம் வசூலானது. திருமங்கலம் நகரில் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து நேற்று வாகனத்தில் சென்றோர், வெளியே சுற்றி திரிந்தவர்கள் அனைவரும் முகக்கவசம் அணியத்துவங்கினர். இது போன்ற அபராத நடவடிக்கை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: