பாலத்தில் சிக்கும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு சுற்றுலா பயணிகள் அவதி

கொடைக்கானல், ஏப்.19:கொடைக்கானல் பைன்மரக்காடுகள் சுற்றுலா பகுதியில் புதிய பாலத்தில் அடிக்கடி சுற்றுலா வாகனங்கள் சிக்குவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கொடைக்கானலில் சுற்றுலா இடங்கள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மோயர் பாயிண்ட், குணாகுகை, பைன் மரக்காடுகள், தூண்பாறை உள்ளிட்ட இடங்கள் சென்று ரசித்து வருவார்கள். இந்த பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகளில் நெடுஞ்சாலை துறை மூலம் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கனரக எந்திரங்களை வைத்து சாலைகளை தோண்டி வேலைபார்த்தும் வருகின்றனர். இப்பகுதி வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகி வருகிறது. நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்த நிலையில் சுற்றுலா வாகனங்களும் அதிகளவில் வந்தது. இந்த பகுதிகள் புதிய பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்தில் சுற்றுலா வாகனம் ஒன்று சிக்கியது.

இதனால் வாகனத்தை எடுக்க முடியாமல் வாகன ஓட்டி பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். புதிய பாலம் நடைபெறும் இடத்தில் சிக்கிய சுற்றுலா வாகனத்தால் நீண்ட தூரம் சுற்றுலா வானங்கள் அணிவகுத்து போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகியது. இதில் சுற்றுலா வாகனம் சிக்கியதால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். இந்த பாலப்பணி நடைபெறும் இடத்தில் அடிக்கடி சுற்றுலா வாகனங்கள் சிக்குவதால் போக்குவரத்து தடை ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறையினர் மூலம் அமைக்கப்படும் பாலப்பணியினை விரைந்து முடிக்க வேண்டுமென சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: