×

புகையால் மூச்சுத்திணறும் மக்கள் குடியிருப்பு அருகே செங்கல் சூளை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

குஜிலியம்பாறை, ஏப்.19: குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் திறந்த வெளியில் உள்ள செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் மக்களுக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜிலியம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. இப்பகுதியில் போதிய மழை இன்றி விவசாயம் செய்ய முடியாததால் பெரும்பாலானோர் விளைநிலங்களை அழித்து செங்கல் சூளை தொழில் செய்கின்றனர். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான செங்கல் சூளைகள் குடியிருப்பு பகுதியில் அருகிலேயே உள்ளது. இந்நிலையில் குஜிலியம்பாறை-திண்டுக்கல் சாலையில் ராமகிரி செல்லும் மெயின்ரோட்டில் குடியிருப்பு பகுதிகள் உள்ள இடத்தில் இரண்டு செங்கல் சூளைகள் உள்ளன. இந்த  செங்கல் சூளையில் தற்போது செங்கல் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. செங்கல் சூளையில் ஒரு வாரத்திற்கு மேலாக சுட்டால்தான் முழு செங்கலாக வெளிக் கொண்டு வர முடியும். இந்த ஒரு வாரத்தில் 24 மணி நேரமும் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

இதுமட்டுமின்றி ஆஸ்துமா உள்ளிட்ட பிற நோயாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து குடியிருப்பு மக்கள் கூறுகையில், செங்கல் சூளைகளை பொறுத்தவரை, சிறிய செங்கல் சூளை உரிமையாளர்கள் யாரும் அனுமதி பெற்று உற்பத்தி செய்வதில்லை. சேம்பர் செங்கல் உற்பத்தி செய்பவர்கள் மட்டுமே மாசுகட்டுப்பாடு துறையில் உரிய அனுமதி பெற்று, புகைக்கூண்டு அமைத்து செயல்படுத்துகின்றனர். ஆனால் சாலையோரம் குடியிருப்பு பகுதியில் வைத்துள்ள செங்கல் சூளையினர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி காற்று மாசு ஏற்படுத்தாத வகையில் புகைக்கூண்டு அமைப்பதில்லை. மாறாக திறந்த வெளியிலேயே செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் திறந்த வெளி முழுவதும் வெளியேறும் நச்சு புகையால் மக்கள் கடுமையாக மூச்சுதிணறல் ஏற்பட்டு நுரையீரல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, நோய் பாதிப்பில் இருந்து இப்பகுதி மக்களை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை