பூலாம்பட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை சரிவு

இடைப்பாடி, ஏப்.19: கொரோனா பரவல் அச்சத்தால் சுற்றுலா பயணிகள் வருகை சரிந்ததால், பூலாம்பட்டியில் விடுமுறை நாளான நேற்று விசைப்படகுகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீர் பூலாம்பட்டி கோனேரிப்பட்டி கதவணையில் தேக்கப்பட்டு மின்உற்பத்தி செய்யப் படுகிறது. இதனால் இங்கு காவிரி ஆற்றின் இருகரை தொட்டு தண்ணீர் கடல் போல காட்சியளிக்கும். இப்பகுதியில் பூலாம்பட்டியில் இருந்து, ஈரோடு மாவட்ட நெருஞ்சிப்பேட்டை விசைப்படகு, பரிசல் போக்குவரத்து நடைபெறுகிறது. நாள்தோறும் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்காக செல்பவர்கள் விசைப்படகை பயன்படுத்தி வருகின்றனர். தவிர, வார விடுமுறை, அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து விசைப்படகில் உல்லாச சவாரி செய்து மகிழ்வார்கள்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், விடுமுறை நாளான நேற்று, சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. விசைப்படகு சவாரி கலையிழந்து காணப்பட்டது. மேலும், பூலாம்பட்டி கதவணை நீர்த்தேக்கப்பகுதியான மூலப்பாறை, குப்பனூர், கூடக்கல் காவிரி கரையோரப் பகுதியில், ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. இதனால் தண்ணீர் ஆவியாகி வீணாவதுடன், துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பொதுப்பணித்துறையினர் இந்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: