அடாவடி வரிவசூலை தட்டிக்கேட்ட வியாபாரி கடையை சூறையாடிய கும்பல்

கெங்கவல்லி, ஏப்.19:ஆத்தூர் அருகே வாரச்சந்தையில் அடாவடி வரி வசூலை தட்டிக்கேட்ட வியாபாரியின் கடையை, அடியாட்களை கொண்டு சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் விநாயகபுரத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடுகிறது. நரசிங்கபுரம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சந்தையில், சுமார் 100க்கும் மேற்பட்டோர் கடை போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர். செல்லியம்பாளையத்தை சேர்ந்த பச்சமுத்து என்பவர் சந்தையை குத்தகை எடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று, ஆத்தூர் அடுத்த தவளப்பட்டியை சேர்ந்த வியாபாரி சீனிவாசன்(47), சந்தையில் கடை போட்டு தக்காளி, சின்னவெங்காயம், கத்திரிக்காய் ஆகியவற்றை வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த குத்தகைக்காரர் பச்சமுத்து, வெற்றி  என்பவர்கள், சீனிவாசனிடம் கடைக்கு வரியாக ₹500 மற்றும் சந்தையை சுத்தம் செய்வதற்கு ₹150 வழங்கும்படி கேட்டுள்ளனர். அதற்கு சீனிவாசன், கடந்த 6 மாத காலமாக கடை போடவில்லை. தற்போது தான் கடை போட்டுள்ளேன். கொரோனா காலகட்டத்தில் சரியான வியாபாரம் இல்லாத நிலையில், இப்படி கட்டாய வசூல் செய்தால் எப்படி என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பச்சமுத்து, வெற்றி ஆகியோர், தனது அடியாட்களை கொண்டு, சுப்ரமணியின் கடையை சூறையாடினர். மேலும், விற்பனைக்க வைத்திருந்த சுமார் ₹15 ஆயிரம் மதிப்பிலான தக்காளி, கத்திரிக்காய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை தூக்கி வீசியதுடன், கடையில் இருந்த எலக்ட்ரானிக் தராசை தூக்கிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Related Stories: