×

மாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம், ஏப்.19:சேலத்தில் கொரோனா நோய் தொற்று தீவிரமாகி வருவதால், தடை செய்யப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகர பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, 3க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு தகர ஷீட்டால் மூடப்பட்டு வருகிறது. மாநகரில் இதுவரை 25க்கும் மேற்பட்ட இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு பேனர் கட்டப்பட்டு, வெளிநபர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே, அரிசிப்பாளையம் ஆர்.டி.பால் தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த தெரு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணி நேற்று தீவிரமாக நடந்தது. இந்நிலையில் நேற்று, பழைய சூரமங்கலம் பகுதிக்கு சென்ற மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், அங்குள்ள சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர், மாஸ்க் வழங்கியதுடன், நோய்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags :
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்