வத்தல் மலையில் காபி போர்டு அமைக்க விவசாயிகள் கோரிக்கை

தர்மபுரி, ஏப்.19: வத்தல்மலையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், காபி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு காபி கொட்டை கொள்முதல் செய்ய காப்பி போர்டு எனப்படும், கூட்டுறவு சங்கம் வத்தல்மலையில் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தர்மபுரியில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில், கடல் மட்டத்திலிருந்து 3ஆயிரம் அடி உயரத்தில் வத்தல்மலை அமைந்துள்ளது. வத்தல்மலையில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல் எப்போதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை இங்கு நிலவி வருகிறது. இதமான குளிர்காற்றும், பனிமூட்டமும் நெஞ்சை கொள்ளை கொள்ளும். வத்தல்மலைப் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமங்களுக்குட்பட்ட பகுதிகளில், சுமார் 350 ஏக்கரில் காபி சாகுபடி செய்யப்படுகிறது. இதில் ஊடுபயிராக மிளகு, எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. சில்வர்ஓக் மரங்கள் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் காப்பி பூ பூக்குகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் காபி அறுவடை செய்யப்படுகிறது. ஏற்காட்டில் உள்ள அரசு காபி வாரிய அலுவலகத்தில் காபி கொள்முதல் செய்துகொள்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: வத்தல் மலை பகுதியில் விளையும் காபி தோட்டத்தில், ஒரு ஏக்கரில் 1 டன் காபி அறுவடை செய்வோம். காப்பி போர்டு எனப்படும் கூட்டுறவு சங்கம் வத்தல்மலையில் அமைக்க வேண்டும். இங்கு விவசாயம் செய்யும் மக்கள், பெரும்பாலனோர் தங்கள் நிலங்களில் காப்பி செடிகள் பயிரிட்டுள்ளனர். இந்த மலைகிராமங்களில் காப்பி செடிகள் பயிரிட்டுள்ளதால், அவற்றை விற்பனை செய்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இடைத்தரகர்கள் தலையீட்டால் உரிய விலை கிடைக்காமல் தவிக்கிறோம். மேலும் காப்பி தோட்டங்களுக்கு, வேளாண்மை துறை சார்பில் தரமான காப்பி செடிகளோ மானிய விலையில் உரங்களோ பல ஆண்டுகளாக வழங்கப்படுவதில்லை. எங்களுக்கு ஏற்காட்டில் காப்பி போர்டு உள்ளது போல, வத்தல்மலையில் காப்பி போர்டு இருந்தால், உற்பத்தி செய்யப்படும் காப்பி கொட்டைகளுக்கு உரிய சந்தை விலை கிடைக்கும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Related Stories:

>