கொரோனா கட்டுப்பாடுகளை மறந்து வெள்ளி கடற்கரையில் குவிந்த மக்கள்

கடலூர், ஏப். 19: கடலூர் சில்வர் பீச்சில் கொரோனா கட்டுப்பாடுகளை மறந்து பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலாத்தலங்களும், கோயில்களும் மூடப்பட்டு வருகின்றன. இது ஒருபுறமிருக்க, ஆசியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையான கடலூர் சில்வர் பீச்சில் நேற்று பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். அங்கு சமூக இடைவெளி சிறிதளவும் கடைபிடிக்கபடவில்லை. மேலும் ஏராளமானோர் முக கவசம் அணியாமல் சுற்றித் திரிந்தனர். கடலூர் நகரின் முக்கிய சுற்றுலா தலமான சில்வர் பீச்சில் இதுபோல நடப்பது நோய் தொற்றுக்கு எளிதில் வழிவகுக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் முழு கவனம் செலுத்தி கடலூர் சில்வர் பீச்சில் மக்கள் குவிவதை தடுக்க வேண்டும். அல்லது வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மக்களுக்கு அறிவுரை வழங்கி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: