×

கோயில் தர்மகர்த்தா கொலை வழக்கில் திடீர் திருப்பம் தாயுடன் தொடர்பு வைத்திருந்ததால் தாத்தாவை கத்தியால் குத்தி கொன்றேன் கைதான பேரன் பரபரப்பு வாக்குமூலம்

விருத்தாசலம், ஏப். 19:  கோயில் தர்மகர்த்தா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தாயுடன் தொடர்பு வைத்திருந்தால் தாத்தாவை கத்தியால் குத்தி கொன்றேன்  என கைதான பேரன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மேலப்பாளையூர் கிராமத்தை சேர்ந்தவர் தவலிங்க செல்வராயர்(72). அப்பகுதியில் உள்ள செல்லியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில் கடந்த 40 வருடத்துக்கும் மேலாக தர்மகர்த்தாவாக இருந்து வந்தார். இவருக்கு புஷ்பவல்லி என்ற மனைவியும், வெங்கடேசன்(50), பிரபாகர்(41), சிவசங்கர் (39) என்ற மூன்று மகன்களும் இளையராணி (43) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் 9ம் தேதி காலை தேவங்குடி மெயின் ரோட்டில் உள்ள தனிநபர் ஒருவருக்கு சொந்தமான தரிசு நிலத்தில், தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயங்களுடன் தவலிங்க செல்வராயர் இறந்து கிடந்தார். இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இறந்தவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி யார் என போலீசார் விசாரணை நடத்தினர். கொலை விவரம் குறித்து துப்பு எதுவும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர்.

இந்நிலையில் செல்வராயரின் குடும்பத்தினர் மாவட்ட கண்காணிப்பாளர்  அபிநவ்விடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் குற்றவாளியை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் இறந்தவரின் உடலை வாங்க மாட்டோம் என கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் உத்தரவின் பேரில், விருத்தாசலம் டிஎஸ்பி மோகன், தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், சப்- இன்ஸ்பெக்டர்கள் கருவேப்பிலங்குறிச்சி கார்த்திகேயன், தனிப்பிரிவு பிரசன்னா, சைபர் செல் சுதாகர் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.  

மேலும் மோப்பநாய் உதவியுடனும், தடயவியல் நிபுணர் உதவியுடனும் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இறந்தவரின் செல்போனில் பதிவான எண்களை கொண்டு விசாரணை செய்தபோது அவர் இறந்த 8ம் தேதி இரவு அவரது செல்போனில் தனது மூத்த மகனான வெங்கடேசனின் மகன் ரஞ்சித்குமார் என்பவருக்கு அடிக்கடி போன் சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ரஞ்சித்குமாரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறியுள்ளார். தொடர்ந்து காவல் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை செய்ததில், ரஞ்சித்குமார் தனது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் செல்வகுமார்(35) என்பவருடன் சேர்ந்து செல்வராயரை கொலை செய்தது தெரியவந்தது.

கொலைக்கான காரணம் குறித்து தனது வாக்குமூலத்தில் ரஞ்சித்குமார் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறியது, தனது தந்தை வெங்கடேசன் உடன் பிறந்த இளையராணியின் கணவர் ராமையா வெளிநாட்டில் இருந்து வருகிறார். இதனால் அவர் அனுப்பும் பணத்தை அப்பகுதியில் பலருக்கு வட்டிக்கு கொடுக்கும் தொழிலை தாத்தா செல்வராயர் செய்து வந்தார். என்னை உடன் வைத்துக் கொண்டு இப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவ்வப்போது செலவுக்கு எனக்கு பணமும் கொடுத்து வந்தார். இந்நிலையில் எனது தாயுடன் இவர்(தாத்தா) தவறான தொடர்பில் இருந்து வந்துள்ளார். நான் வீட்டிற்கு சென்ற போது இருவரும் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்ததை நேரில் பார்த்தேன். அதிலிருந்து தாத்தாவோடு நான் தொடர்பை துண்டித்தேன். அவர் என்னை அடிக்கடி அழைத்து அங்கு சென்று வட்டி பணம் வாங்கிவா இங்கு சென்று வட்டி பணம் வாங்கிவா என்று கூறி வருவார். அதன்படி கடந்த எட்டாம் தேதி அன்று இரவு அவர் எனக்கு போன் செய்து அழைத்து ஒருவரிடம் வட்டி பணம் வாங்கி வா என கூறினார்.

இப்போது எனக்கு வேலை இருக்கிறது என நான் கூறினேன். இதைவிட உனக்கு வேறு என்ன வேலை என என்னிடம் கோபமாக பேசினார். நான் அப்போது எனது சித்தப்பாக்களுக்கு கொடுத்ததைப் போல எனது தந்தைக்கும் சொத்துக்களை தராமல் எங்களை ஏமாற்றி விட்டாய் என கூறினேன். அதற்கு அவர் இது உன் பாட்டன் உடைய சொத்து அல்ல, நான் சம்பாதித்த சொத்து என கூறி என்னை அடிக்க வந்தார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டபோது நான் சுதாரித்துக் கொண்டு ஏற்கனவே என் தாயுடன் உள்ள தவறான உறவை மனதில் நினைத்துக் கொண்டு ஓங்கி அறைந்தேன்.  இதில் மயக்கமாகி கீழே விழுந்தார். பின்பு அதே பகுதியை சேர்ந்த எனது நண்பன் செல்வகுமாரை அழைத்தேன். பிறகு இருவரும் சேர்ந்து நான் ஏற்கனவே கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் கழுத்து, வாய் பகுதியில் குத்தினேன். அதன்பிறகு அவருடைய உயிர் பிரிந்தது என தெரிந்த பிறகு அங்கிருந்து சென்றேன். இருப்பினும் நான் வெளியில் எங்கும் தப்பித்து செல்லாமல் என் குடும்பத்தினருடேனே மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு புகார் அளிக்க சென்றேன். என்னை எப்படியோ போலீசார் பிடித்துவிட்டனர் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ரஞ்சித்குமார், செல்வகுமார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இன்று உடல் ஒப்படைப்பு
கடந்த 10 நாட்களாக கொலையாளியை கண்டுபிடிக்காமல் செல்வராயரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தததால் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேதப் கிடங்கில் உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று (19ம்தேதி) அவரது உடலை வாங்குவதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல் என நேற்று தினகரன் செய்தி வெளியானதை தொடர்ந்து கொலையாளியை பிடித்து உள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED குடும்பத்தகராறில் விபரீதம் கிணற்றில்...