×

கொரோனா பாதித்தவர்கள் டாக்டர் அனுமதி இருந்தால் மட்டுமே வீடுகளில் இருந்து சிகிச்சை பெற முடியும் ஆணையர் ஆஷாஅஜித் பேட்டி

நாகர்கோவில், ஏப்.19 : டாக்டர் பரிசோதனை செய்து அனுமதி அளித்த பின்னரே, கொரோனா பாதித்தவர்கள் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற முடியும் என்று ஆணையர் ஆஷா அஜித் கூறினார். நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நாளொன்றுக்கு சராசரியாக 50 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.  வடசேரி கனக மூலம் புதுத்தெரு மற்றும் வல்லன் குமாரன்விளை பகுதியில் இரண்டு தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.  இதில் வடசேரி கனக மூலம் புது தெருவில் நான்கு வீடுகளில் 9 பேர் இதுவரை பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த பகுதியில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நேற்று ஆய்வு மேற்கொண்டார். வீடு, வீடாக நடைபெறும் கணக்கெடுப்பு பணிகளை பார்வையிட்ட அவர், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் பொடியும் வழங்கினார். உதவிகள் தேவைப்படும் நபர்கள், மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

பின்னர் ஆணையர் ஆஷா அஜித் நிருபர்களிடம்  கூறியதாவது: நாகர்கோவில் மாநகர பகுதிகளில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் எந்த வித அச்சமுமின்றி உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தற்போது இரண்டாவது கட்ட பரவலில் வயிற்றுப்போக்கு, கண் எரிச்சல் உள்ளிட்ட சில புதிய அறிகுறிகளையும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் . எனவே இது போன்ற அறிகுறி உள்ளவர்கள் உரிய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்வதுடன், தொற்று பரவலையும் கட்டுப்படுத்த முடியும். கொரோனா 2 வது அலை குடும்பத்தில் உள்ளவர்களை ஒட்டு மொத்தமாக தாக்கி வருகிறது.

கொரோனா பாதித்தவர்கள் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற டாக்டர்கள் அனுமதி அவசியம். உரிய பரிசோதனை செய்து, டாக்டர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே தொற்று பாதித்தவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள முடியும். நாகர்கோவில் நகரில் 5 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். லேசான பாதிப்பு இருக்கும் போதே பரிசோதனை செய்துகொண்டால் பாதிப்பின் பரவலை கட்டுப்படுத்த முடியும். கொரோனா பரவல் குறைய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். வீட்டை விட்டு தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பொதுவெளிகளில் நடமாடும் போது அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மாநகராட்சி எடுக்கக் கூடிய நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .நாகர்கோவில் மாநகராட்சியில்  வீடுவீடாக காய்ச்சல் கணக்கெடுப்பு தொடங்கி இருக்கிறது. முதல்நாள் 12 ஆயிரம் வீடுகளில் கணக்கெடுப்பு செய்திருந்தனர். இந்த பணிகள் 5 அல்லது ஒரு வாரத்தில் முடிக்கப்படும். கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். 308 பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட கணக்கெடுப்பு முடிந்த பின்னர், 2 வது கட்ட கணக்கெடுப்பும் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Commissioner ,Asha Ajith ,
× RELATED வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள...