குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 18,403 ஆக உயர்வு நாகர்கோவிலில் இதுவரை 4800 பேருக்கு தொற்று

நாகர்கோவில், ஏப்.19:  குமரி மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 18,403 ஆக அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த 16ம் தேதி 174 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் ஒரே நாளில் 157 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 2 பேர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவர். மீதி 155 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதில் நாகர்கோவில் மாநகராட்சியில் 67 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 14 பேர், கிள்ளியூர் ஒன்றியத்தில் 5 பேர், குருந்தன்கோடு ஒன்றியத்தில் 20 பேர், மேல்புறத்தில் 10 பேர், முஞ்சிறையில் 7 பேர், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் 9 பேர், தோவாளையில் 14 பேர், தக்கலை ஒன்றியத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரே குடும்பத்தில் 4, 5 பேர் என மொத்தமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குமரி மாவட்டத்தை  பொறுத்தவரை 700 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்ப்பிணிகள், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய வகை கொரோனா இளம் வயதினரைஅதிகமாக தாக்குகிறது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,400 ஆக உயர்ந்துள்ளது. இதில் 17,150 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சளி பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு உள்ளன. நாள் ஒன்றுக்கு 3800 பேர் வரை சளி பரிசோதனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் நோய் தொற்று அறிகுறிகள் தோன்றியவுடன் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் கேட்டுக் கொண்டு உள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் இதுவரை மொத்த  பாதிப்பு எண்ணிக்கை 4800 ஆக உயர்ந்துள்ளது. 91 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரு வாரங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2 தெருக்கள் சீல்  வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு  மற்றும் கபசுரகுடிநீர் பொடி வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. வசூல் :  குமரி மாவட்டத்தில் முக கவசம் அணியாதது, சமூக இடைவெளி பின்பற்றாதது போன்ற காரணங்களுக்காக ரூ.68 லட்சத்து 89ஆயிரத்து 926 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன் தினம் காவல் துறையினர் மட்டும் 708 பேரிடம் அபராதம் வசூலித்துள்ளனர். நாகர்கோவில் துணை போலீஸ் சரகத்தில் 178, தக்கலை துணை போலீஸ் சரகத்தில் 174, குளச்சலில் 234 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி சரகத்தில் 122 பேரிடம் அபராதம் வசூலித்துள்ளனர். கடந்த 8ம் தேதி முதல் காவல்துறையினர் அபராதம் வசூலிக்கிறார்கள். கடந்த 10 நாட்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

Related Stories:

>