×

வருமா, வராதா என தெரியாமல் குமரியில் தடுப்பூசி மையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள் 2வது டோஸ் போட வேண்டிய தேதி கடந்ததால் பீதி

நாகர்கோவில், ஏப். 19 :  குமரியில் உள்ள தடுப்பூசி மையங்களில் நேற்றும் மணிக்கணக்கில் மக்கள் காத்திருந்தனர். குறைந்த எண்ணிக்கையிலான ஊசி மருந்துகள் இருந்ததால் டோக்கன் கொடுக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் அதிகரித்து வருகிறது.  இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் அதிகமாக உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போடலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், தடுப்பூசி மையங்களை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 9 அரசு மருத்துவமனைகள், 47 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 41 மினி கிளினிக்குகள், 42 தனியார் ஆஸ்பத்திரிகள் என மொத்தம் 140 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து,  பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக ஒவ்வொரு மையங்களிலும் குவிந்தனர்.

நாள்தோறும் 300 முதல் 400 பேருக்கு என தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை திடீரென 4 ஆயிரமாக உயர்ந்தது. இதனால் தடுப்பூசிகள் தீர்ந்தன. கோவாக்சின், கோவிஷீல்டு என இரு தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. 4 வது நாளாக நேற்றும் தட்டுப்பாடு நீடித்தது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தடுப்பூசிகள் போட தொடங்கினர். பலர் தடுப்பூசி மையங்களுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர். முதல் கட்ட தடுப்பூசி போட்டவர்கள் 28 நாட்களில் 2ம் கட்ட தடுப்பூசி போட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த கால அவகாசத்தை 6 வாரங்கள் முதல் 8 வாரங்கள் என நீடித்து விட்டனர்.  இருந்தாலும் 28 நாட்களுக்குள் போட வேண்டும் என முதலில் அறிவித்ததால், மக்கள் அந்த பீதியுடனேயே  தடுப்பூசி மையங்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.  ஆனால் தடுப்பூசி இல்லாமல் ஏமாற்றத்துடன் சென்ற வண்ணம் உள்ளனர்.

140 மையங்களில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் தற்போது மினி கிளினிக்குகள், பல அரசு மருத்துவமனைகளில், ஆரம்ப  மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்களில் தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 90 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று முன்தினம் 1,578 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். விடுமுறை தினமான நேற்றும் பல்வேறு மையங்களில் தடுப்பூசி போட மக்கள் காத்திருந்தனர். இருப்புகளை சரிபார்த்து டோக்கன் வினியோகம் செய்து, தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. பல மையங்களில் தடுப்பூசி மருந்துகள் இல்லாமல் மூடப்பட்டன. ஊசி மருந்து வந்தால் போடுவோம் என கூறியதால், மக்கள் வருமா? வராதா? என தெரியாமல் காத்திருந்தனர்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று இரு தடுப்பூசி மையங்களும் மூடப்பட்டு கிடந்தன. நிலைமையை சமாளிக்க முதற்கட்டமாக  நேற்று முன் தினம்  3000 டோஸ் மருந்துகள் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வாங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை மேலும் 400 டோஸ்கள் வந்ததுள்ளன. இந்த மருந்துகள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வேலூரில் இருந்து இன்று அல்லது நாளைக்குள் 3000 டோஸ்  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,  தினமும் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த மருந்துகள் தேவைப்படும் முக்கியமான அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன என்றனர்.

2வது டோஸ் தாமதம் ஆனாலும் பயப்பட வேண்டாம்
கலெக்டர் அரவிந்த் கூறுகையில்,  2வது டோஸ் போட 6 வாரங்கள் முதல் 8 வாரங்கள் என நிர்ணயம் செய்துள்ளனர். 2 வது டோஸ் 2, 3 நாட்கள் தாமதம் ஆனாலும் பிரச்னை இல்லை என மருத்துவர்கள் கூறி உள்ளனர். 2 வது டோஸ் போட வருகிறவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  மருத்துவர்கள் கூறும் கால அளவுப்படி 2வது டோஸ் தடுப்பூசிகள் போட்டால் போதும் என்றனர்.

Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...