×

கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் வழங்கியதில் முறைகேடு

நாகர்கோவில், ஏப்.19:  குமரி மாவட்டத்தில் 115 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள்  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம் நிதி உதவி பெற்று மாவட்டத்திலுள்ள 1.5 லட்சம் விவசாயிகளுக்கு கடந்த ஆண்டில் விவசாய கடனாக சுமார் ₹250 கோடி வழங்கியுள்ளது. இதில் பெரும்பாலான தொடக்க வேளாண்மை சங்கங்களில் முறைகேடாக கடன் வழங்கப்பட்டுள்ளது. சுமார் ₹40 கோடி அளவுக்கு, தில்லுமுல்லு செய்து கடன் கொடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னை தொடர்பாக குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் ராம், பிரதமருக்கு அனுப்பி உள்ள மனுவில்,  மத்திய, மாநில அரசுகளுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் மோசடியாக வழங்கப்பட்டுள்ள  கடன் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறி உள்ளார்.  

இது குறித்து ராம் கூறுகையில், வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் தங்கள் விருப்பம் போல வேண்டியவர்களுக்கு, தகுதியற்றவர்களுக்கு சொத்து விபரம், பட்டா, சிட்டா அடங்கல், நில உடமை சான்றிதழ்கள் என எதையும் வாங்காமல் போலி சர்வே எண் குறிப்பிட்டு பல லட்சம் ரூபாய் வரை கடனாக கொடுத்து மோசடி செய்திருப்பதாக அறிகிறோம். தென்னை, வாழை, ரப்பர், நெல் போன்ற விவசாய பயிர்கள் இல்லாதவர்களுக்கும், குத்தகை பாட்டம் கூட எடுக்காதவர்களுக்கும், விவசாயத்தை பற்றி ஒன்றுமே தெரியாத விவசாயிகள் அல்லாதவர்களுக்கும் நிர்வாகிகளின் உறவினர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பல மடங்கு வரை தொகை விவசாயக்கடனாக கொடுத்துள்ளனர். சமீபத்தில் 22 கிளைகளில் 2021 மார்ச் மாதம் மட்டுமே ₹40 கோடிக்கு கடன் பட்டியல் தயார் செய்து ஆணை பெற்றுள்ளதாக தெரிகிறது. ஆனால் போதிய நிதி இல்லாத காரணத்தினால் ஒரு சில கிளைகளில் மட்டும் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்கவில்லை.

இந்த போலி கடன்களுக்கு அரசு 7 சதவீதம் வட்டி மானியமாக வழங்குகிறது. இதில் மத்திய அரசு 3 சதவீதமும், மாநில அரசு 4 சதவீதமும் வழங்குகிறது. இதனால் அரசிற்கு வருடந்தோறும் சுமார் 10 கோடி ரூபாய் வட்டி மானியம் என்ற பெயரில் நிதி இழப்பு ஏற்படுகின்றது. இந்த கடன் முறைகேடுகளுக்கு நபார்டு வங்கி, ரிசர்வ் வங்கி, கூட்டுறவு துறையும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. ஆதலால் முறைகேடுகள் செய்து மத்திய அரசிற்கும் நிதி இழப்பீடு செய்தது குறித்து சிபிஐ விசாரணை செய்வதோடு, பல கோடி இழப்பு ஏற்பட காரணமான கூட்டுறவு சங்க செயலாளர்கள், உயர் அதிகாரிகள் என அனைவரிடமும், இது குறித்து விசாரணை செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி உள்ளோம் என்றார்.

ஒரு ஏக்கருக்கு ₹32 ஆயிரம்
கடன் வழங்குவதற்கு முன்,  விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து அவர்களுடைய விவசாய நிலங்கள் அடங்கிய  விவரங்கள் பட்டா, சிட்டா அடங்கல் போன்ற சான்றிதழ்களின் ஒரிஜினல்களை  பரிசோதனை செய்து தகுதியுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட  வேண்டும். உரிய ஆவணங்களை தாக்கல் செய்யும் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு  ₹32 ஆயிரம் முதல் 38 ஆயிரம் வரை  கடன் வழங்கப்பட வேண்டும் என்பது அரசு  விதியாகும்.

Tags :
× RELATED திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை