×

கொரோனா பாதித்தவர்களுக்கு ஆலோசனை வழங்க 100 தொலைபேசிகள் கொண்ட சிறப்பு கட்டுப்பாட்டு அறை: மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில், 100 தொலைபேசி இணைப்புகளுடன் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, இணை கமிஷனர் ஆல்பி ஜான் வர்கீஷ், மாநகர நல அதிகாரி டாக்டர் எம்.ஜெகதீசன், மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் எம்.எஸ்.ஹேமலதா ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் வகையில் 100 இணைப்புகளை கொண்ட கட்டுப்பாட்டு மையம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் மனநல ஆலோசனை பெற 044-46122300, 044-25384520 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். கடந்த முறை மனநல ஆலோசனை கட்டுப்பாட்டு மையத்துக்கு 4 லட்சம் அழைப்புகள் வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் இந்த ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் தடுப்பூசி தொடர்பான சந்தேகங்கள், கொரோனா குறித்தான அடிப்படை சந்தேகம் குறித்து மக்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களுக்கு தினமும் சுழற்சி முறையில் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கி கண்காணிக்கப்படுவார்கள். சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான ஏற்பாடு தான் இந்த கட்டுப்பாடு அறை மற்றும் ஆலோசனை மையம் ஆகும். எனவே பொதுமக்கள் நல்ல முறையில் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ‘பிராங்க்’ அழைப்புகளை மேற்கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED கொரோனா பாதித்தவர்களுக்கு ஆலோசனை...