பாதாள சாக்கடை அடைப்பால் தெருக்களில் கழிவுநீர் தேக்கம்: தொற்றுநோய் பீதியில் மக்கள்

வேளச்சேரி: சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம் 180வது வார்டுக்கு உட்பட்ட தரமணி மகாத்மா காந்தி நகரில் 36 தெருக்கள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கட்டபொம்மன் தெரு, டி.கே.கபாலி தெரு, ராஜாஜி தெரு உட்பட 4 தெருக்களில் கடந்த 2 வாரமாக பாதாள சாக்கடை அடைப்பால், கழிவுநீர் வெளியேறி ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நடந்து செல்பவர்கள், வாகனஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  இதுகுறித்து அடையாறு இந்திரா நகரில் உள்ள குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.

எனவே, உடனடியாக பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த பகுதியில் பாதாள சாக்கடையை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குகிறது. கடந்த சில வருடங்களாக இந்த பிரச்னை நீடித்து வருகிறது. இதுபோன்ற நேரங்களில் அதிகாரிகள் பெயரளவுக்கு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதால், சில நாட்களிலேயே மீண்டும் அடைப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. வீடுகளின் முன்பு கழிவுநீர் தேங்குவதால், கொசு உற்பத்தி அதிகரித்து குழந்தைகள், முதிவயர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, உயர் அதிகாரிகள், இந்த இடத்தை ஆய்வு செய்து இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>