திறப்பு விழா நடந்த சில மணி நேரத்தில் விதிமீறிய பிரியாணி கடைக்கு சீல்

வேளச்சேரி: வேளச்சேரி 100 அடி சாலையில் நேற்று புதிதாக பிரியாணி கடை திறக்கப்பட்டது. இங்கு திறப்பு விழா சலுகையாக, 50% தள்ளுபடி அறிவித்திருந்தனர். இதனை அறிந்த பொதுமக்கள், காலை முதலே கடையின் முன்பு கூடி, நீண்ட வரிசையில் சமூக இடைவெளி இல்லாமல் பிரியாணி வாங்கி சென்றனர். தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், கடை முன்பு முண்டியடித்த பொதுமக்களை சமூக இடைவெளி விட்டு, வரிசையில் நிற்குமாறு கூறியுள்ளனர். ஆனால், அதை ஏற்காமல், மாநகராட்சி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனால் கடையை மூடும்படி, அவர்கள் கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அப்போது, வரிசையில் நின்ற பலருக்கு ஏற்கனவே டோக்கன் வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார். அதனையடுத்து, டோக்கன் வழங்கியவர்களுக்கு மட்டும் பிரியாணி வழங்க கால அவகாசம் கொடுத்தனர். பின்னர், அக்கடையை பூட்டி சீல் வைத்தனர். பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றாமல் முண்டியடித்ததால், திறந்த சில மணி நேரத்திலேயே பிரியாணி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>