சண்டையை விலக்கி விட்ட போலீஸ்காரருக்கு சரமாரி அடி உதை: வாலிபர் கைது

பல்லாவரம்: சண்டையை விலக்கி விட்ட போலீஸ்காரரை சரமாரி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். பம்மல், நாகல்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரபல பார்சல் சர்வீஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஆவடியை சேர்ந்த ரமேஷ் (43), வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ரமேஷ் வேனில் பார்சல்களை ஏற்றிக்கொண்டு, அவற்றை உரிய இடத்தில் விநியோகம் செய்ய அனகாபுத்தூர் காமராஜபுரம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அதிவேகமாக வந்த ஆட்டோ ஒன்று, வேனின் பக்கவாட்டில் உரசியது. இதில் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. உடனே, ஆட்டோவில் இருந்த 6 பேர், ரமேஷிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, அந்த வழியாக வந்த, சங்கர் நகர் காவல் நிலைய காவலர் கண்ணன், சண்டையை விலக்கி விட முயற்ச்சி செய்தார். ஒருகட்டத்தில், ஆட்டோவில் வந்த ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த தினேஷ் (25), காவலர் கண்ணனை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த கண்ணன் அளித்த புகாரின் பேரில், சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தினேஷை கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More