×

மணி விழா கண்ட அரசு பள்ளியில் வெள்ளி விழா கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்

திருப்போரூர், ஏப்.18: மணிவிழா கண்ட அரசு பள்ளியின், வெள்ளி விழா கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என ஆசிரியர்களும், பெற்றோர்களும் வலியுறுத்துகின்றனர். திருப்போரூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு 6 வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்களும், 11, 12ம் வகுப்புகளில் இருபாலரும் படிக்கின்றனர். நபார்டு வங்கி நிதி உதவியுடன் இப்பள்ளிக்கு போதுமான வகுப்பறைகள், ஆசிரியர்கள் உள்ளனர். இப்பள்ளி திருப்போரூர் ஒன்றியத்தில் பழமையான பள்ளி என்ற பெயரை பெற்றுள்ளது. கடந்த 1961ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 60ம் ஆண்டு விழா நடைபெற உள்ள நிலையில், கடந்த 1987ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. அப்போது வெள்ளிவிழா நினைவு கட்டிடம் கட்டப்பட்டது.

தற்போது 33 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் வெள்ளி விழா நினைவு கட்டிடம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வகுப்புகள் நடத்தப்படாமல் அந்தக் கட்டிடம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
போதிய வகுப்பறைகள் இருப்பதால் கல்வித்துறையும் இந்த கட்டிடத்தை புதுப்பிப்பதில் அக்கறை காட்டவில்லை. இருப்பினும் வெள்ளி விழா நினைவாக கட்டப்பட்ட கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பித்து பாதுகாக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விரும்புகின்றனர். எனவே, மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வெள்ளிவிழா நினைவுக் கட்டிடத்தை பழுது பார்த்து சீரமைக்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Tags :
× RELATED சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4...