×

வக்கீல் கொலையில் 3 பேர் கைது

காஞ்சிபுரம், ஏப்.18: காஞ்சிபுரம் அடுத்த காரை கிராமத்தை சேர்ந்தவர் அழகரசன் (41). வழக்கறிஞர். கடந்த 12ம் தேதி, காரை கிராமம் அருகே வழக்கறிஞர் அழகரசன், அவரது நண்பர் நண்பர்கள் ஜெய்சங்கர் (40), சுவாமி நாதன் (39) ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த  மர்மநபர்கள், அழகரசனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். இதுதொடர்பாக, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வழக்கறிஞர் அழகரசன், நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, மர்மநபர்கள் சிலர், ஆட்டோவில் பண்ணைக்கு உள்ளே வந்தனர். இதை பார்த்த அழகரசன், ஆட்டோ தடுத்து நிறுத்தி உள்ளே வரக்கூடாது என கூறியுள்ளார்.இதனால் ஆட்டோவில் வந்தவர்களுக்கும் அழகரசன் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. பின்னர் ஆட்டோவில் வந்தவர்கள் திரும்பி சென்றுவிட்டனர். மீண்டும் மாலை 6 மணியளவில் கத்தி உள்பட பயங்கர ஆயுதங்களுடன்  ஆட்டோவில் பண்ணைக்குள் புகுந்த மர்மநபர்கள், அழகரசன் மற்றும் ஜெய்சங்கரை கத்தியால் வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே அழகரசன் ரத்தவெள்ளத்தில் இறந்தார். அங்கிருந்து ஆட்டோவில் வந்தவர்கள் தப்பிவிட்டனர். ஜெய்சங்கர் என்பவருக்கு தலை மற்றும் மார்புப் பகுதி வெட்டுக்காயம் ஏற்பட்டு காரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிந்தது. மேலும் விசாரணையில், காரை கிராமம் அடுத்த செட்டியார்பேட்டையில் பதுங்கி இருந்த வெங்கடேசன் (24), வேலு (33), தர் ( 33 ) ஆகியோர் அழகரசனை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாணையில், மேற்கண்ட பண்ணை நிலத்தில் வெங்கடேசன், அடிக்கடி தனது கூட்டாளிகளுடன் மது அருந்துவது, சீட்டாடுவது வழக்கம். இதனை அழகரசன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், அங்கிருந்து சென்ற வெங்கடேசன், மாலையில் ஆயுதங்களுடன் வந்து அழகரசனை வெட்டி கொலை செய்தனர் என தெரியவந்ததாக போலீசார் கூறினர். தொடர்ந்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED தேனியில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக 3 வீடுகள் இடிந்தன