மணல் லாரி மோதி பெண் பலி நிவாரணம் கேட்டு பொதுமக்கள் 2வது நாள் சாலை மறியல் போராட்டம்

செய்யூர், ஏப் 18: மணல் லாரி மோதி பலியான பெண் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் நேற்று மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. செய்யூர் அடுத்த மேற்கு செய்யூர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி லட்சுமி (40). நேற்று முன்தினம் காலை உடல்நிலை சரியில்லாத அவரை, அவரது மகன் சுமன் பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது, செய்யூர் தாலுகா அலுவலகம் அருகே சென்றபோது, பின்னால் வந்த மணல் லாரி, பைக் மீது மோதியதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அவ்வழியாக செல்லும் மணல் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் சமரசம் பேசிய செய்யூர் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில, நேற்று காலை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் போலீசாரிடம் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் மீண்டும் செய்யூர் - கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  அவர்களிடம் மீண்டும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: