வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ரயில்வே ஊழியர் மீது மனைவி போலீசில் புகார்

திருவள்ளூர், ஏப்.18: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கண்ணையா நகர் பகுதியை சேர்ந்தவர் சிந்துஜா(35). இவர் திருவள்ளூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் குமார்(34). இவரும் ரயில்வே ஊழியர். இரண்டு பேரும் ரயில்வே துறையில் பணியாற்றியதால் அடிக்கடி சந்திப்பு நடைபெற்று காதலாக மாறி காதலித்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு கடந்த 2019ல் வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு இரண்டு பேரும் திருவள்ளூர் ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து குமார், சிந்துஜாதாவிடம் ₹35 லட்சத்தில் வீடு வாங்கி தருமாறும், மேலும் சம்பள பணத்தை மொத்தமாக தன்னிடம் கொடுக்குமாறு கேட்டு வரதட்சணை கொடுமை செய்தார்.

மேலும், குமார் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து சென்னை வியாசர்பாடி சேர்ந்த நிவேதா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து சிந்துஜா திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கொடுமை செய்து வருவதாகவும், தனது திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் கணவர் குமார், மாமியார் மன்னா, நாத்தனார் ரேகா, நண்பர் அன்புராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: