தடுப்பு சுவர் மீது பைக் மோதி போலீஸ்காரர், மகள் பரிதாப பலி

ஆவடி, ஏப்.18: ஆவடி அருகே சாலை தடுப்பு சுவர் மீது பைக் மோதியதில் மாஜி போலீஸ்காரர், மகள் ஆகியோர் மண்டை உடைந்து பரிதாபமாக பலியாகினர். திருவள்ளூர் அருகே முருக்கஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்(40). மாஜி போலீஸ்காரர். நேற்று மாலை பாஸ்கர் தனது மகள் ப்ரீத்தியுடன்(13) மீஞ்சூரில் உள்ள தங்கை வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டார். வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி வெளி வட்டச்சாலை ஆவடி அடுத்த மோரை பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவரது பைக் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது. இதில், அவரும் மகளும் பைக்குடன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பாஸ்கர் சம்பவ இடத்தில் மண்டை உடைந்து பலியானார்.

மேலும், அவரது மகள் ப்ரீத்தி படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனையடுத்து, அவளை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாடியநல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து அவளை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி ப்ரித்தி பரிதாபமாக இறந்தாள்.  தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆவடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories:

>